நண்பரை கொன்று புதைத்த 2 வாலிபர்கள் கைது- உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
- போலீசார் வாலிபர் மாயம் என வழக்குப்பதிவு செய்து, மாயமான அருண் கார்த்திக்கை தேடி வந்தனர்.
- கொன்று புதைத்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:
கோவை பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அருண்கார்த்திக் (வயது25). டிரைவர்.
அருண்கார்த்திக் கடந்த 10-ந் தேதி வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
அவரது தந்தை மகனை அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தார். ஆனாலும் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
அவரது நண்பர்களிடம் விசாரித்த போதும், அவர்களும் நாங்கள் பார்க்கவில்லை என்றே கூறியுள்ளனர். இதையடுத்து கணேசன் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் வாலிபர் மாயம் என வழக்குப்பதிவு செய்து, மாயமான அருண் கார்த்திக்கை தேடி வந்தனர்.
மேலும் பல்வேறு கோணங்களில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அருண்கார்த்திக்கின் நண்பர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது போலீசாருக்கு எஸ்.சந்திராபுரத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் (26), அரவிந்த் என்ற அருண்ராஜ் (25) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
அவர்களை பிடித்து விசாரித்த போது முதலில் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்து வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அருண்கார்த்திக்கை அடித்து கொன்று, உடலை கல்குவாரி அருகே புதைத்து விட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் எஸ்.சந்திராபுரத்தில் உள்ள கல்குவாரி அருகே அழைத்து சென்றனர். அவர்கள் அங்கு அருண்கார்த்திக்கை கொன்று குப்பை, மணல் போட்டு புதைத்த இடத்தை காண்பித்தனர்.
சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. ஏ.எஸ்.பி. பிருந்தா, தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். அங்கு அதிகளவிலான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.
அவர்கள் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
அருண்கார்த்திக் எங்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு தான் அறிமுகமானார். நாங்கள் 3 பேரும் எப்போதும் ஒன்றாக மது குடிப்பதையும், சூதாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தோம்.
தொடர்ந்து ஒன்றாக சந்தித்து கொண்டதால் நாங்கள் 3 பேரும் நண்பர்களாக மாறிவிட்டோம். எங்கு சென்றாலும் 3 பேரும் ஒன்றாக தான் செல்வோம்.
அருண் கார்த்திக், எங்கள் 2 பேரிடம் பணம் கேட்டார். நாங்களும் நண்பர் என்பதால் எங்களிடம் இருந்த பணத்தை கொடுத்தோம். ஆனால் பணம் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி தரவில்லை.
இது தொடர்பாக அவரிடம் கேட்டபோதெல்லாம் மழுப்பலான பதில்களையே கூறி வந்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து அவர் எங்களுடன் சேருவதை நிறுத்திவிட்டார். சம்பவத்தன்று நாங்கள் அருண்கார்த்திக்கு போன் செய்து, பணம் சம்பந்தமாக நாம் சமாதானமாக சென்று விடலாம்.
முன்பு போல நாம் நண்பர்களாக இருப்போம் என கூறி சமாதானம் பேசுவதற்கு அழைத்தோம். அவரும் வந்தார். பின்னர் 3 பேரும் எஸ்.சந்திராபுரத்தில் பாறைமேடு பகுதிக்கு சென்று மது அருந்தினோம்.
அப்போது எங்களுக்குள் மீண்டும் பணம் தொடர்பாக தகராறு எழுந்தது.
இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அங்கிருந்த கட்டையை எடுத்து அருண்கார்த்திக்கை தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
அவர் இறந்துவிட்டதால் எங்களுக்கு பதற்றம் ஏற்பட்டது. உடனே அவரது உடலை மறைத்து விட முடிவு செய்தோம். அதன்படி அங்கு குழி தோண்டி உடலை உள்ளே தூக்கி போட்டு, மணல் மற்றும் அங்கு கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து போட்டு மூடி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டோம்.
அருண்கார்த்திக்கின் தந்தை எங்களிடம் வந்து கேட்டபோது, நாங்கள் அவரை பார்க்கவில்லை என்று தெரிவித்ததோடு, அவருடன் இணைந்து தேடுவது போலவும் நாடகமாடினோம்.
ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்கள் 2 பேரையும் கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கொன்று புதைக்கப்பட்ட அருண்கார்த்திக்கின் உடல் போலீசார் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடல் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபரை நண்பர்களே அடித்து கொன்று புதைத்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.