இலங்கைக்கு கடத்த முயன்ற 200 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது
- நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- தலைமறைவான படகின் உரிமையாளர் சந்திரனை தேடி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் படகு மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க சுங்கதுறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வேளாங்கண்ணி வெள்ளாற்றின் பாலத்தில் இன்று அதிகாலை சுங்கதுறை அதிகாரிகள் படகில் சென்று திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு சந்தேகபடும்படி நின்ற பைபர் படகில் ஏறி சோதனை செய்தனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கஞ்சா மூட்டைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மொத்த எடை 200 கிலோவாகும். மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நாகை புஷ்பவனத்தை சேர்ந்த வாஞ்சிநாதன் மற்றும் அருளழகன், நாலுவேதபதியை சேர்ந்த வேணுகோபால் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர்.
அதில் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான படகின் உரிமையாளர் சந்திரனை தேடி வருகிறார்கள்.