செய்திகள்

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை தெளிவுபடுத்த வேண்டும்: தா.பாண்டியன்

Published On 2017-10-02 11:48 GMT   |   Update On 2017-10-02 11:48 GMT
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
விழுப்புரம்:

விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த நடிகர் சிவாஜிக்கு சிலை அமைத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவர் எழுதிய வசனத்தால்தான் சிவாஜிகணேசனுக்கு திரையுலகில் பெருமை. கருணாநிதியின் பெயரை, சிவாஜி சிலையில் இருந்து நீக்கியது மலிவான அரசியல்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை. டெல்லி, இதில் தலையிடுவதை எந்த விதத்திலும் நாங்கள் ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர். இருந்தபோது அ.தி.மு.க. எப்படி இருந்ததோ? அந்த அ.தி.மு.க. இப்போது இல்லை.

நடிகர் கமலின் அரசியல் கொள்கை என்ன? அவர் அரசியலில் இறங்குவாரா? இல்லையா? என்பதை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். அவர் அடுத்த படத்தில் நடிப்பது என்பதுதான் உறுதி.

பிரதமர் மோடி தலைமையிலான அரசில், கடந்த 3 மாதங்களில் சமையல் கியாஸ் விலை ரூ.110 உயர்ந்துள்ளது. பெட்ரோல்- டீசல் விலை 8 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த ஆட்சியில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. எந்த விலையும் குறைக்கப்படவில்லை.

ரெயில் சேவை தொடங்கி 140 ஆண்டுகளாக ஏறி, இறங்கும் ரெயில்வே மேம்பாலம் கூட சரிவர போடத்தெரியாத இந்த அரசு, ரூ.1 லட்சம் கோடியில் புல்லட் ரெயில் விடுகிறேன் என்பது புல்லட் பொய். இந்த புல்லட் ரெயில் தேவையே இல்லை.

வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றியை தடுக்காவிட்டால் இந்திய நாடே நிலைக்காது. நாடு சிதறிப்போகும். இது இறுதிப்போர். தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.க.வை முறியடிக்க மற்ற அரசியல் கட்சியினரை விட மக்கள் விழிப்புணர்வுடன் தயாராக இருக்கிறார்கள்.

தி.மு.க.வை முறியடிப்பதுதான் அ.தி.மு.க.வுக்கு வேலை. அ.தி.மு.க.வை முறியடிப்பதுதான் தி.மு.க.வின் வேலை என இருந்து கொண்டு பா.ஜ.க.வை முடியடிப்பது இல்லை என்றால், அவர்களோடு கூட்டணி இல்லை. பிற ஜனநாயக கட்சிகளோடு நாங்கள் சேருவோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருபவர்கள், அரசியலில் உடன்கட்டை ஏறுவதற்கு சமம். அதோடு அவர்களது வரலாறும் முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News