செய்திகள்

கவர்னர் கிரண்பேடி விருந்தை நாராயணசாமி, அமைச்சர்கள் புறக்கணிப்பு

Published On 2018-05-29 04:01 GMT   |   Update On 2018-05-29 04:01 GMT
புதுவை கவர்னர் கிரண்பேடி அளித்த விருந்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் மோதல் மீண்டும் வெடித்துள்ளது. #governorkiranbedi #narayanasamy
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.

மோதல் அவ்வப்போது விஸ்வரூபம் எடுப்பதும், பின்னர் சுமூகமாவதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நாராயணசாமி அமைச்சரவையில் பங்கேற்றுள்ள அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் கவர்னர் கிரண்பேடியுடன் சமாதான போக்கை கடைபிடித்து வருகின்றனர்.



கிரண்பேடி புதுவை கவர்னராக பொறுப்பேற்று இன்றோடு (செவ்வாய்க்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனையொட்டி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று மாலை விருந்து அளித்தார்.

இந்த விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி தவிர்த்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் ஆவேசமான முதல்-அமைச்சர் நாராயணசாமி, “தன்மானம் இல்லாதவர்கள் மட்டுமே கவர்னரின் விருந்தில் பங்கேற்பார்கள்” என்று கூறினார்.

இதனையடுத்து நேற்று மாலை நடந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்த், திருமுருகன், செல்வம், சுகுமாரன், கோபிகா, சந்திரபிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர். பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர், தலைமை செயலாளர் அஸ்வின் குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். #governorkiranbedi #narayanasamy

Tags:    

Similar News