செய்திகள்

பா.ஜனதாவை மக்கள் விமர்சிக்கவில்லை - தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

Published On 2018-06-30 07:46 GMT   |   Update On 2018-06-30 07:46 GMT
“மக்கள் பா.ஜ.க.வை விமர்சிக்கவில்லை எதிர்கட்சிகள் தான் விமர்சிக்கின்றனர்” என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #BJP
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லிக்கு 3 மந்திரிகளை சந்திக்க சென்றேன் அதன்படி அவர்களை சந்தித்தேன். மந்திரி நிதின்கட்காரி சேலம் பசுமை 8 வழிசாலை குறித்து சில விளக்கங்கள் கொடுத்துள்ளார். அதில் மக்களுக்கு பலன் உள்ளது. பசுமை சாலை அமைப்பதற்கு பல வழிமுறைகள் உண்டு. அதன்படி தான் அந்த பணி நடந்து கொண்டிருக்கிறது.

சாலை போடுவதற்கு 5 மலைகளில் எந்த மலையையும் குடையவில்லை. சேலம் பைபாஸ் தவிர வேறு எந்த இடத்திலும் சுரங்கம் உருவாக்கவில்லை. இந்த திட்டத்தினால் சேலம், சென்னை, பெங்களூர், மதுரை ஆகிய நெடுந்சாலைகளில் 30 சதவீத விபத்து தடுக்கப்படும். ஆரம்பத்தில் எந்த திட்டமும் தவறாக தான் புரிந்து கொள்ளப்படும்.

பசுமை சாலை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபடும். மாநில அரசு இத்திட்டத்தை குறித்து மக்களிடம் எச்சரிக்கையோடு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும், இதையும் மீறி அவர்களுக்கு மன வருத்தம் இருந்தால் அது என்ன என்று பரிசீலிக்கப்படும்.

விவசாயிகளிடம் கோரிக்கை மனு வாங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பல நல்ல திட்டங்கள் வரும். மக்கள் பாஜகவை விமர்சிக்கவில்லை. எதிர்கட்சிகள் தான் விமர்சிக்கின்றனர். இதை தாண்டி தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வரப்படும்.

மாநில அரசு பசுமை சாலை குறித்த சந்தேகங்களை விளக்க வேண்டும். வைகோவின் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்து கொண்டிருந்தால் ஆக்கபூர்வமான காரியங்கள் எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசின் திட்டங்களை வைகோ ஆதரித்தால் தான் ஆச்சரியம். இவர்களுக்கு எந்த திட்டமும் முதலில் தவறாகவும் பின்னர் சரியாகவும் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP

Tags:    

Similar News