செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் 2 பேர் உயிரை பறித்தது

Published On 2018-08-07 05:32 GMT   |   Update On 2018-08-07 06:21 GMT
சென்னை பட்டினப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக குடிபோதையில் இருந்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை துரைப்பாக்கம் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் பென்ஸ்ரீகன் (37). சென்னை ஐகோர்ட்டு வக்கீல்.

இவர் நேற்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜியின் வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் மாலை 4 மணியளவில் தனது ‘வோக்ஸ்வேகன்’ சொகுசு காரில் பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகர், டி.ஜி.எஸ்.தினகரன் சாலை வழியாக வக்கீல் பென்ஸ்ரீகன் வேகமாக சென்றார்.

அப்போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. அதே வேகத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு சரக்கு ஆட்டோ ஆகியவற்றின் மீதும் மோதியது.

அப்போது, விபத்து நடந்த பகுதியின் அருகே பஸ்சுக்காக காத்து நின்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரை வேகமாக ஓட்டி வந்த வக்கீலை அடித்து உதைத்தனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்த இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அமீர்ஜகான் (35), சைதாப்பேட்டை அபுதா கீர் (32), மயிலாப்பூர் அருண் பிரகாஷ் (25), பழைய வண்ணாரப்பேட்டை இளையராஜா (39), கீழ்ப் பாக்கம் கார்டன் மார்க்கெரட் (25), நாமக்கல் மாவட்டம் பிரகாஷ் (39).

படுகாயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபனா சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். விபத்துக்கு காரணமான வக்கீல் பென்ஸ்ரீகன் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் அவர் குடிபோதையில் கார் ஓட்டியது தெரியவந்தது. அவர் மீது குடித்து விட்டு கார் ஓட்டியது, வேகமாக கார் ஓட்டியது, கவன குறைவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் காயம் அடைந்தவர்களில் அமீர்ஜகான், அபுதாகீர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தனர். அமீர்ஜகான் ஏழுகிணறு குட்டி மேஸ்திரி தெருவை சேர்ந்தவர். ‘பிசியோதெரபிஸ்ட்’ ஆக வேலை பார்த்து வந்தார். அபுதாகீர் சைதாப்பேட்டை துரைசாமி 2-வது தெருவை சேர்ந்தவர்.

படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் கீழ்ப்பாக்கம் கார்டன் மார்க்கெரட் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வக்கீல் ஒருவரே குடித்து விட்டு கார் ஓட்டி மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தி இருப்பது போலீசாரையும், பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Tags:    

Similar News