செய்திகள்
இறந்த பாப்பாத்தியம்மாள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தெரியாமல் ரூ.2.20 லட்சம் சேமித்து வைத்து இறந்துபோன மூதாட்டி

Published On 2018-08-28 03:57 GMT   |   Update On 2018-08-28 03:57 GMT
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தெரியாமல் மூதாட்டி சேமித்து வைத்த ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் அவர் இறந்த பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். #demonetisation
தேனி:

தேனியை அடுத்த வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை மேற்கு தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தியம்மாள் (வயது 95). இவரது கணவர் வரதராஜபெருமாள் தேவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாமியாராக சென்று விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அவர்கள் 3 பேரும் இறந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து பாப்பாத்தியம்மாள் கடந்த 20 வருடங்களாக தனது மருமகளான மாரியம்மாளின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று பாப்பாத்தியம்மாள் இறந்துவிட்டார். அவரது உடலை இறுதிச்சடங்கு செய்வதற்கு அவரது உறவினர்கள் தயார் செய்து கொண்டு இருந்தனர்.



அப்போது அவரது படுக்கையில் துணியின் கீழே ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. அதில் மத்திய அரசால் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் 2 லட்சத்து 20 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. கடந்த 24 வருடங்களாக பாப்பாத்தியம்மாள் அரசின் உதவித்தொகை பெற்றுவந்தார். இது தவிர அவரை பார்க்கவரும் உறவினர்கள் கொடுக்கும் பணத்தையும் வீட்டாருக்கு தெரியாமல் சேமித்து வைத்து இருக்கிறார்.

மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது தெரியாமல் பாப்பாத்தியம்மாள் தனது பேரக்குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக ரூபாய் நோட்டுகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தது உறவினர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் உறவினர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை அவரது உடல் மீது பரப்பி ஒப்பாரி வைத்து அழுதனர்.

பாப்பாத்தியம்மாளை பராமரித்து வந்த மாரியம்மாளுக்கு 3 மகள்களும், அவர்களுக்கு 6 குழந்தைகளும் உள்ளனர். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தெரியாமல் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த பாப்பாத்தியம்மாள் குடும்பத்தினரின் வறுமை கருதி அரசு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்காக அவர்கள் செல்லாத 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பத்திரப்படுத்தி வைத்து உள்ளனர்.  #demonetisation
Tags:    

Similar News