ஓமலூர் அருகே கோவில் விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் சாமி ஆடியதால் பரபரப்பு
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டியப் பட்டி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஏரியில் பழமையான நீர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா வருடா வருடம், தை மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இதே போன்று இந்த ஆண்டு கடந்த செவ்வாய் கிழமை பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
இதை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்று, தினமும் சாமிக்கு அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று காலை பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து மாலை அலகு குத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பெண்கள் நாக்கு அலகு, கடவாய்ப்பூட்டு அலகு, உள்ளிட்டவைகள் குத்தி வந்தனர்.
அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவ, மாணவிகள் சிலர் திடீரென அருள் வந்து சாமி ஆடினர். தொடர்ந்து அந்த பகுதி பெரியவர்கள் அவர்களை பிடித்த போதும் அவர்கள் தொடர்ந்து சாமி வந்து ஆடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாமி கோவிலை சுற்றி வந்த அவர்கள் அலகுகளை பிடுங்கிய பின் திரு நீர் இட்ட பின் மாணவ, மாணவிகள் சாமி அருள் நீங்கி ஆடுவதை நிறுத்தினர். அந்த பகுதியில் வான வேடிக்கை மற்றும் வண்டி வேடிக்கை நடைபெற்றது.
இதில் பத்ரகாளியம்மன் வேடமிட்டு வந்தவருக்கு அருள் வந்து ஆடு மற்றும் கோழிகளை கடித்து பலியிட்டார். இதில் அம்மன்வேடம், முருகன், ஈஸ்வரன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட வேடமணிந்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.