செய்திகள்
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.

பிரதமர் மோடியை கண்டித்து தஞ்சை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-02-06 10:51 GMT   |   Update On 2019-02-06 10:51 GMT
கடனை தள்ளுபடி செய்யாமல் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் மோடியை கண்டித்து தஞ்சை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பிரதமர் மோடியின் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர்.

பின்னர் பிரதமர் மோடி விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கொடுத்து ஏமாற்றபார்க்கிறார். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17 மட்டுமே கிடைக்கும் என்றும், இந்த திட்டம் விவசாயிகளுக்கு பயனளிக்காதது என்றும் பிரதமருக்கு உணர்த்தும் வகையில் அவருக்கு ரூ.17 மணியார்டர் செய்தனர்.

இதைத் தொடர்ந்து கக்கரை சுகுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அது 3 தவணையாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளை அதிருப்தி அடைய வைப்பதாக உள்ளது.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்றாமல் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது அவர்களை ஏமாற்றும் செயலாகும். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் ஆதரவு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு திட்டத்தால் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17 விதம்தான் கிடைக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் பிரதமருக்கு விவசாயிகள் ரூ.17 மணியார்டர் மூலம் அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News