குமாரசாமிபேட்டை அருகே இன்று காலை வேன் கவிழ்ந்து பெண் உள்பட 2 தொழிலாளர்கள் பலி
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், குழியனூர், நரசிங்க கோம்பை ஆகிய கிராமத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட கட்டிட கான்கிரீட் தொழிலாளர்கள் 2 வாகனங்களில் ஏரியூருக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஒரு பிக்கப் வேனில் பின்புறம் கான்கீரிட் கலவை எந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த பிக்கப் வேனின் 10 தொழிலாளர்கள் இருந்தனர்.
இன்று காலை தருமபுரி குமாரசாமி பேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது வேகத்தடை மீது ஏறிய போது பிக்கப் வேன் எதிர் பாராத விதமாக நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த குழியனூர் பகுதியை சேர்ந்த குமணி மனைவி கலா (வயது40), நரசிங்ககோம்பை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (45) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சாலம்மாள் (43), நடுப்பிள்ளை (38), உன்னா மலை (30) உள்பட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த வழியாக வந்த தருமபுரி தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி நடந்த விபத்தை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு தடங்கம் சுப்பிரமணி சென்று படுகாயம் அடைந்தவர்களிடம் விசாரித்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான கலா, கிருஷ்ணன் ஆகிய 2 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.