செய்திகள் (Tamil News)

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளும் அ.தி.மு.க. கோட்டை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

Published On 2019-05-15 10:13 GMT   |   Update On 2019-05-15 10:13 GMT
இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் எக்கு கோட்டையாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் இடைத் தேர்தலில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 50 பூத்களின் வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த தேர்தல் பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

தமிழக முதல்வர் எடப்பாடியார் நல்லாட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் இந்த தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் நமது வேட்பாளர் மோகனை 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தே தீரவேண்டும் என்ற கொள்கையோடு நாம் பணியாற்ற வேண்டும்.

உழைத்தால் உயர்வு உண்டு, பதவிகள் உண்டு என்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எத்தனையோ பேரை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஆகவே நீங்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்.

உங்கள் உழைப்பை இந்த இயக்கத்திற்காக கொடுங்கள். உங்களுக்கான தேவைகளை கட்சி செய்து கொடுக்கும். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகள் எடப்பாடியாரின் எக்கு கோட்டையாக உள்ளது. திருப்பரங்குன்றத்தில் முனியாண்டியை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். அவரை வெற்றி பெறச் செய்து அதனை மீண்டும் நிரூபிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News