செய்திகள்

திருமணம் நிச்சயம் செய்த மாப்பிள்ளை மீது தாக்குதல் - கைதான கல்லூரி மாணவி சிறையில் அடைப்பு

Published On 2019-05-28 06:07 GMT   |   Update On 2019-05-28 06:07 GMT
ஊத்தங்கரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தாக்கி கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லனூரை சேர்ந்தவர் சரவணன் (வயது27). பொறியியல் பட்டதாரி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் உறவினரான சென்னப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் ஜான்சி (19) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஜான்சியை பார்ப்பதற்காக சென்னப்ப நாயக்கனூருக்கு சரவணன் சென்றார். அப்போது வீட்டில் ஜான்சி அவரது பெற்றோர் இருந்துள்ளனர். வீட்டிற்கு வந்த சரவணனுக்கு ஜான்சி லெமன் ஜூஸ் கொடுத்தார். பின்னர் வீட்டின் பின்புறம் சென்று தனியாக பேசலாம் என்று ஜான்சி, சரவணனை அழைத்தார். அங்கு அவருடன் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் ஜான்சி வீட்டிற்குள் சென்றுவிட்டார். சிறிது நேரத்திற்கு பின்னர் சரவணன் ரத்தக் காயங்களுடன் சாலையோரம் கிடந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் சரவணனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து சரவணன் ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரன், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜான்சியிடம் தீவிர விசாரணை நடத்தினார்.

இதில் ஜான்சி போலீசாரிடம் கூறியதாவது:-

நான் வாட்ஸ்அப் பயன்படுத்திய போது திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அறிமுகமானார். அதனால் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் எங்களுக்குள் காதலாக மாறியது. இதனால் நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். இந்த விசயம் எங்கள் குடும்பத்திற்கு தெரியாது.

அதனால் நான் எனக்கு நிச்சயம் செய்த சரவணணை கொலை செய்ய முடிவு செய்தேன். அதனால் சரவணனை எனது வீட்டின் அருகே அழைத்து அவருக்கு ஜூஸ்சில் மயக்க மருந்து கொடுத்தேன்.

அப்போது அவர் சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் எனது காதலன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் ஆகிய 3 பேரும் சேர்ந்து சரவணனை தாக்கினோம். பின்னர் அவரை முட்புதரில் தூக்கி வீசி விட்டு சென்று விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தாக்கி கொலை செய்ய முயன்ற கல்லூரி மாணவி ஜான்சி மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு கிருஷ்ணகிரி மகளிர் சிறையில் அடைத்தனர். மேலும் காதலன் கார்த்திக்கையும், அவரது நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News