தமிழ்நாடு (Tamil Nadu)
தங்கமணி, சைலேந்திர பாபு

திருவண்ணாமலை விசாரணை கைதி உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

Published On 2022-04-30 18:34 GMT   |   Update On 2022-04-30 19:23 GMT
திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
சென்னை:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தட்டரணை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவர் சாராயம் காய்ச்சி பதுக்கி வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த 26-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்ததாக போலீஸ் மற்றும் சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தங்கமணியை போலீசார் மற்றும் சிறைத்துறையினர் அடித்து கொலை செய்துவிட்டதாக அவருடைய மனைவி மலர், திருவண்ணாமலை கலெக்டர் முருகேசிடம் புகார் கொடுத்தார். 

தங்கமணியின் மரணத்துக்கு காரணமான போலீசார் மற்றும் சிறைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை பெறமாட்டோம் என்பதில் தீர்க்கமாக இருந்தனர். 

திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் உள்பட 4 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார். 

திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், விசாரணை கைதி தங்கமணி இறந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Similar News