தமிழ்நாடு

கார்ப்பரேட் திமுக ஆட்சி.. காஞ்சிபுரம் போராட்டமே சாட்சி - ஜெயக்குமார் விமர்சனம்

Published On 2024-10-09 16:20 GMT   |   Update On 2024-10-09 16:20 GMT
  • பேருந்தில் செல்லும் தொழிலாளர்களை காவல்துறையை வைத்து மிரட்டியுள்ளனர்.
  • கூட்டணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராடுவதை கூட அனுமதிக்காமல் அராஜக ஆட்சி செய்து வருகிறார் முதல்வர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி சம்பள உயர்வு. சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "அண்ணாவின் மண்ணில் அந்நியர் நலன் காக்கும் அரசின் கொடுஞ்செயல்கள். இரவோடு இரவாக காவல்துறையினரை வைத்து போராடி வந்த தொழிலாளர்கள் கைது. வருவாய்த்துறையினரை வைத்து போராட்ட பந்தல்கள் அகற்றம்

கூட்டணி இயக்க தலைவர்கள் போராட்டத்தில் பங்குபெற்றிட கூடாது என்பதற்காக கார்ப்பரேட்களின் கைக்கூலியான திமுக அரசு கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ளது.

போராடுபவர்களை அழைத்து பேசாமல் போலியானவர்களை அழைத்து பேசிவிட்டு போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என முதலமைச்சர் நியமித்த அமைச்சர்கள் குழு பேட்டி அளித்திருப்பது நியாயமா?

முதலமைச்சரும் அமைச்சர்களும் கார்ப்பரேட்டிற்கு விலைபோகி விட்டதை உணர்த்தும் வகையில் தான் அமைச்சரின் பேச்சு இருந்தது.

உண்மையான கம்யூனிஸ்ட் தோழர்களை மாவோயிஸ்டுகள் என அடையாளப்படுத்த அரசு துணிந்திருப்பது பாசிசத்தின் உச்சம்!

பேருந்தில் செல்லும் தொழிலாளர்களை காவல்துறையை வைத்து மிரட்டியுள்ளனர். தொழிலாளர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி இருப்பது பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்திற்கு பந்தல் அமைத்தவர்கள் முதல் தேநீர்,உணவு வழங்கியவர்கள் என அனைவரையும் இந்த பாசிச அரசு மிரட்டியுள்ளது.

சங்கம் அமைக்க கூடாது என்ற சாம்சங் நிறுவனத்தின் கோரிக்கையை முதல்வர் ஏற்றுக் கொண்டு விட்டாரா?

போராட்டங்கள் தொடர்வதை தாங்கி கொள்ள முடியாத 'கார்ப்பரேட்களின் நண்பன்' ஸ்டாலின் அதிகாரத்தை பயன்படுத்தி அடக்குமுறை செய்கிறார்.

கூட்டணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராடுவதை கூட அனுமதிக்காமல் அராஜக ஆட்சி செய்து வருகிறார் முதல்வர்.

சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள். கரைந்து கொண்டிருக்கும் தொண்டர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News