காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 ஏரிகள் நிரம்பின: செம்பரம்பாக்கம் ஏரியும் நிரம்புகிறது
- 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.
- வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும், சென்னை மாவட்டத்தில் 16 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஏரிகளும் என மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், வெளி மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக இந்த ஏரிகள் நிரம்பி வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1022 ஏரிகளில் தற்போது வரை 38 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 21 ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. மேலும் 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பக்கம் ஏரிக்கும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 23 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 21.5 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் பராமரிப்பு பணி நடைபெற்றது. மதகுகள் தண்ணீர் திறப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏரி முழு கொள்ளளவை எட்டியவுடன் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.