தமிழ்நாடு

வங்கியில் போலி நகைகள் வைத்து ரூ.25 லட்சம் மோசடி- வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு வாக்குவாதம்

Published On 2022-07-17 10:54 GMT   |   Update On 2022-07-17 10:54 GMT
  • வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் குறித்த விவரம் ஆராய்ந்த போது அதில் 13 பேரின் நகைகள் போலியானது என தெரிய வந்தது.
  • வங்கியில் அடமானத்துக்கு வைக்கப்பட்டுள்ள நகைகள் அனைத்தும் நாளை முழுவதுமாக சோதனை செய்யப்படும்.

மொடக்குறிச்சி:

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு அவல்பூந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்த பிரகாஷ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதையடுத்து புதிதாக நகை மதிப்பீட்டாளராக ஒருவர் பணிக்கு வந்தார். அவர் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை சோதனை செய்தார்.

அப்போது அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் 13 பேரின் நகை போலி என தெரிய வந்தது. இந்த போலி நகை மூலம் ரூ.25 லட்சத்துக்கு மேல் கடனாக பெற்றுள்ளதும் தெரிய வந்தது.

இது சம்பந்தமாக அந்த 13 பேரும் வங்கிக்கு அழைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் நாங்கள் போலி நகைகளை அடமானம் வைக்கவில்லை. நகை மதிப்பீட்டாளராக இருந்த பிரகாஷ் அவசர தேவைக்காக அவரது நகையை கொடுத்து வங்கியில் அடமானம் வைத்து தருமாறு கேட்டுக் கொண்டதால் அடமானம் வைத்ததாக தெரிவித்தனர்.

இதனால் வங்கியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இது குறித்து தகவல் பரவியதும் வங்கியில் நகை அடமானம் வைத்த 50-க்கும் மேற்பட்டோர் வங்கியை நேற்று இரவு முற்றுகையிட்டனர்.

தங்களது நகைகளும் போலி நகையாக மாறி இருக்குமோ என்ற அச்சத்தில் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் அரச்சலூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நாளை வங்கியில் உள்ள மற்ற நகைகள் முழுவதுமாக சோதனை செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

சம்பந்தப்பட்ட வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் குறித்த விவரம் ஆராய்ந்த போது அதில் 13 பேரின் நகைகள் போலியானது என தெரிய வந்தது. இந்த போலி நகைகள் மூலம் ரூ.25 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது அவர்கள் நகை மதிப்பீட்டாளராக இருந்த பிரகாஷ் சொல்லி தான் அவருடைய நகையை அடமானத்துக்கு வைத்தோம் என்று கூறியுள்ளனர்.

தற்போது பிரகாஷ் உயிரோடு இல்லை அவர் இறந்து விட்டார். அவர்கள் கூறியது உண்மைதானா? அப்படியே அவர்கள் கூறியது உண்மை என்றால் நகையை அடமானம் வைப்பதற்காக இவர்களுக்கு அவர் பணம் ஏதும் கொடுத்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை முடிவில் உண்மையான நிலவரம் தெரியவரும்.

இதேப்போல் வங்கியில் அடமானத்துக்கு வைக்கப்பட்டுள்ள நகைகள் அனைத்தும் நாளை முழுவதுமாக சோதனை செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News