தமிழ்நாடு

நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

Published On 2024-04-05 06:51 GMT   |   Update On 2024-04-05 06:51 GMT
  • தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசுவதும், பின்னர் பல நாட்கள் போராடி போலீசார் அதனை மீட்பதும் தொடர்கதையாக உள்ளது.
  • கடலில் குறிப்பிட்ட இடத்தில் நேற்று நீச்சல் தெரிந்த கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டத் தில் இருந்து அண்டை நாடான இலங்கை கடல் வழியாக 30 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக இருநாட்டில் இருந்தும் சமூகவிரோதிகள் படகு மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், தங்கம், மஞ்சள், மருந்துகள், பீடி இலைகள் போன்றவற்றை சட்ட விரோதமாக கடத்துவது அடிக்கடி நடந்து வருகிறது.

இதனை தடுக்க கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அண்மைக் காலமாக இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. தங்க கடத்தல் குறித்து தகவல் அறிந்து உடனே கடலோர காவல் படை போலீசாரும் நடுக்கடலிலேயே கடத்தல்காரர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டுவரும் தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசுவதும், பின்னர் பல நாட்கள் போராடி போலீசார் அதனை மீட்பதும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இருந்து ஒரு படகு மூலமாக ராமேசுவரத்துக்கு தங்கம் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கடலோர போலீசார் ரோந்து கப்பலில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றனர். அப்போது மண்டபத்திற்கும், வேதாளைக்கும் இடையே ஒரு படகு சந்தேகத்திற்கிடமாக சென்றது. உடனே கடலோர போலீசார் அந்த படகை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். இதை பார்தத கடலில் இருந்த கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்க கட்டிகளை கடலில் வீசியதாக தெரிகிறது. இந்த நிலையில் நடுக்கடலில் படகை மறித்த போலீசார் அதில் இருந்த 3 பேரை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது தங்கம் கடலில் வீசியது தெரியவந்தது. ஆனால் அதன் அளவு எவ்வளவு என்பது தெரியவில்லை.

கடத்தல்காரர்கள் கொடுத்த தகவலின்பேரில் கடலில் குறிப்பிட்ட இடத்தில் நேற்று நீச்சல் தெரிந்த கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணிநேரம் நடைபெற்ற தேடுதலில் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாலையில் தேடும் பணி கைவிட்ட போலீசார் இன்று காலை அந்த பகுதியில் நீச்சல் வீரர்கள், கடலில் மூழ்கும் பயிற்சி பெற்ற ஸ்கூபா டை வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் மூலம் கடலில் குதித்து 2 நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் மதிப்பு எவ்வளவு? யாருக்காக தங்கம் கடத்தி வரப்பட்டது? மூளையாக செயல்பட்டது யார்? என பல்வேறு கோணங்களில் மத்திய வருவாய்துறை அதிகாரிகள், கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News