தமிழ்நாடு

யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தி தாளவாடியில் கடைகள் அடைப்பு

Published On 2024-03-13 08:18 GMT   |   Update On 2024-03-13 08:18 GMT
  • காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க பழைய ரெயில்வே தண்டவாளங்களை பயன்படுத்தி வேலிகள் அமைக்க வேண்டும்.
  • விவசாய சங்கத்தின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்களும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமம் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தாளவாடி மக்களின் பிரதான தொழிலே விவசாயம் தான். இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, மக்காச்சோளம் போன்றவற்றை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.

தாளவாடி அருகே வனப்பகுதி உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள நீர் குட்டைகள் வறண்டு போய் உள்ளன.

இதனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் உணவைத் தேடி காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டத்தில் காவலில் இருப்பது வழக்கம்.

இந்த நேரங்களில் சில சமயம் யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து இரவு நேரம் காவலில் இருக்கும் விவசாயிகளை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதில் சில விவசாயிகளும் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தாளவாடி அருகே திகனாரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாக்கையா (வயது 62) என்பவர் தனது மக்காச்சோளம் காட்டில் இரவு நேர காவலில் இருந்தபோது அவரது தோட்டத்துக்குள் வந்த காட்டு யானை மாக்கையாவை மிதித்து கொன்றது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாளவாடி விவசாயிகள் ஒன்று திரண்டு விவசாயி மாக்கையா உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருப்பது போல் வனப்பகுதியை விட்டு யானை வெளியேறும் இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும், காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பதை தடுக்க பழைய ரெயில்வே தண்டவாளங்களை பயன்படுத்தி வேலிகள் அமைக்க வேண்டும், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க அகழி வெட்ட வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கம் அறிவித்திருந்தது.

விவசாய சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்களும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தாளவாடி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஓசூர் ரோடு, அண்ணா நகர், சாம்ராஜ்நகர் ரோடு, சக்தி ரோடு, தலமலை ரோடு போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இருப்பினும் வழக்கம் போல் மருந்தகங்கள், ஆஸ்ப த்திரிகள் செயல்பட்டன. அதே போன்று பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாளவாடி பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News