தமிழ்நாடு

நெல்லை மாவட்டத்தில் 75 முகாம்களில் 3,500 பேர் தங்க வைப்பு

Published On 2023-12-19 06:26 GMT   |   Update On 2023-12-19 06:26 GMT
  • தன்னார்வ தொண்டு அமைப்புகளும் சாப்பாடு, பிரட், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
  • பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாலகங்கள் முன்பு நீண்ட வரிசையின் நின்று பால் பாக்கெட்டுகள் வாங்கி சென்றனர்.

நெல்லை:

நெல்லையில் பெய்த மிக கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாநகர பகுதி மற்றும் மாவட்டத்தில் தாமிரபரணி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் முற்றிலுமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு 75 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சுமார் 3,500 பேர் நேற்று முன்தினம் முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் மாநகர பகுதியில் மட்டும் 12 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில் தன்னார்வலர்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு உதவினர். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தன்னார்வ தொண்டு அமைப்புகளும் சாப்பாடு, பிரட், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.

இன்று மழை குறைந்துவிட்டதால் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. சந்திப்பு சிந்துப்பூந்துறை உள்ளிட்ட பகுதியில் படகு மூலம் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. சுமார் 20 படகுகள் மூலமாக பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மழை வெள்ளத்தின் காரணமாக சுமார் 36 கிராமங்கள் மற்றும் 2 பேரூராட்சிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநகரில் பொதுமக்களின் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாக கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாலகங்கள் முன்பு நீண்ட வரிசையின் நின்று பால் பாக்கெட்டுகள் வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News