செயலி மூலம் வாலிபரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து நகை பறித்த 4 பேர் கைது
- கத்தியை காட்டி மிரட்டி பொறியியல் பட்டதாரியிடம் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
- பட்டதாரி வாலிபர் சிறிது நாட்கள் கழித்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தை சேர்ந்த 27 வயது பொறியியல் பட்டதாரி வாலிபர் சரியான வேலை கிடைக்காததால் தந்தையுடன் தறி ஓட்டும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்து வந்துள்ளது. இதற்காக இந்த வாலிபர் செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கை ஒருவரிடம் சமீபத்தில் பேசி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த வாலிபர் செயலி மூலம் பொறியியல் பட்டதாரி வாலிபருடன் தொடர்பு கொண்டு விஜயமங்கலம் அருகே உள்ள ஒரு காலி இடத்திற்கு வரச்சொல்லி உள்ளார்.
இதனை நம்பி அந்த பொறியியல் பட்டதாரி வாலிபரும் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த வாலிபரிடம் அறிமுகமாகி அவர்கள் 2 பேரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர்.
அந்த நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொறியியல் பட்டதாரியிடம் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியதையடுத்து, அவர் அணிந்திருந்த 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் நீ ஓரினச்சேர்க்கைக்கு எங்களை அழைத்தாய் என வெளியில் கூறி அசிங்கப்படுத்தி விடுவோம் என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து அந்த பட்டதாரி வாலிபர் சிறிது நாட்கள் கழித்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் பொறியியல் பட்டதாரிடம் கத்தியை காட்டி மிரட்டி 4 பவுன் பறித்து சென்றது திருப்பூர் டி.டி.பி. மில் ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் (21), திருப்பூர் 15 வேலம்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த நந்தகுமார் (21), 15 வேலம்பாளையம் நேரு வீதியை சேர்ந்த அங்குகுமார் (21), சேலம் மாவட்டம் தாரமங்கலம் வண்ணார் சந்து பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து பெருந்துறை போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அதன்படி இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது ஆனந்தகுமார் என தெரிய வந்தது. ஆனந்தகுமார் உடுமலைப்பேட்டையில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் எனவும், அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தால் ஓரினச்சேர்க்கை செயலி குறித்து தெரிந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து ஆனந்தகுமார் போனில் ஓரினச்சேர்க்கை செயலி மூலம் தொடர்பு கொண்டு அவர் கூறும் இடங்களுக்கு வரும் நபர்களை நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி பணம் பறித்து வந்து உள்ளார்.
இதுகுறித்து வெளியே சொன்னால் அவமானம் ஆகிவிடும் என்பதால் இது குறித்து யாரும் புகார் செய்யவில்லை. இதனை சாதமாக பயன்படுத்தி கொண்ட ஆனந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் இதேபோல் சேலம், பவானி, ஆத்தூர், சங்ககிரி, திருப்பூர், பெருமாநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இவ்வாறு மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.
கைதான 4 பேர்களிடம் இருந்து சொகுசு கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.