சென்னை ஐகோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு
- ஐகோர்ட்டு கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.
- தமிழ்வழியில் படித்த வக்கீல்கள் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம்.
சென்னை:
முதன்மை மாவட்ட நீதிபதிகளாக பதவி வகித்து வந்த ஆர். சக்திவேல், பி. தனபால், சி. குமரப்பன், கே .ராஜசேகர் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து 4 புதிய நீதிபதிகளும் இன்று காலையில் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி. ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய நீதிபதிகளை வரவேற்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி. எஸ் அமல்ராஜ் , வக்கீல் சங்க தலைவர்கள் ஆகியோர் பேசினர். இதற்கு நன்றி தெரிவித்து புதிய நீதிபதிகள் ஏற்புரை ஆற்றினர்.
நீதிபதி ஆர்.சக்திவேல், ஐகோர்ட்டு கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.
நீதிபதி பி.தனபால் பேசும்போது, நான் பள்ளிப்படிப்பு தமிழ்வழியில் படித்தேன். அதனால், தமிழ்வழியில் படித்த வக்கீல்கள் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம். முயற்சித்தால் இயலாதது என்று எதுவுமில்லை என கூறினார். மேலும் தனக்கு கல்வி கற்க உதவிய தன் சொந்த கிராமத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் மூத்த வக்கீல்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் .
நீதிபதி சி. குமரப்பன், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதாக நான் பணியாற்றுவேன் என்றுஉறுதி அளித்தார்.
நீதிபதி ராஜசேகர் தன்னுடைய குடும்பத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் தன்னுடன் பணியாற்றிய வக்கீல்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.