தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 40 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது- செந்தில் பாலாஜி தகவல்

Published On 2023-04-15 05:58 GMT   |   Update On 2023-04-15 05:59 GMT
  • தினசரி மின் நுகர்வு கணக்கெடுப்பின் படி நேற்று முன்தினம் (13- ந் தேதி) 18,252 மெகாவாட் அளவு அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.
  • முந்தைய உச்சபட்ச நுகர்வு ஏப். 12-ந் தேதி 39.92 கோடி யூனிட்டாக இருந்தது.

சென்னை:

கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால் மின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், தினசரி மின் தேவை 16 ஆயிரம் மெகா வாட் என்ற அளவைத் தாண்டி வருகிறது. மேலும், வேளாண் பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்பு களால், அந்தப் பிரிவுக்காக மட்டும் கூடுதலாக 727 மெகாவாட் செலவாகிறது.

இத்தகைய காரணங்களால், மார்ச் 4-ந் தேதி தினசரி மின் நுகர்வு முதல் முறையாக 17,584 மெகா வாட்டாக அதிகரித்தது. இதற்கு முன் 29.4.22-ல் தினசரி மின் நுகர்வு 17,563 மெகாவாட் என்பதே சாதனை அளவாக இருந்தது. விவசாயத்துக்கான 18 மணி நேர மின் விநியோகம், பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் உள்ளிட்ட காரணங்களால் மின் பயன்பாடு அதிகரித்தது.

இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவாக மார்ச் 15-ந் தேதி தினசரி மின் நுகர்வு 17,647 மெகா வாட்டாக அதிகரித்தது. ஆனால், அதற்கு அடுத்த நாள் மார்ச் 16-ந் தேதி, தினசரி மின் நுகர்வு 18,053 மெகாவாட் அதி கரித்து புதிய உச்சத்தை எட்டி முந்தைய நாள் சாதனையை முறியடித்தது.

இந்நிலையில், தினசரி மின் நுகர்வு கணக்கெடுப்பின் படி நேற்று முன்தினம் (13- ந் தேதி) 18,252 மெகாவாட் அளவு அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. இதற்கிடையே, ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தின் அளவு, யூனிட்டாக தற்போது கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் ஒரே நாளில் (ஏப்.13) அதிகபட்சமாக மின் நுகர்வு 40 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஏப்.13-ந் தேதி 40 கோடியூனிட்டுகள் மின்நுகர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேவை எவ்வித மின் தடையுமின்றி ஈடுசெய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வு ஏப். 12-ந் தேதி 39.92 கோடி யூனிட்டாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News