தமிழ்நாடு

ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் இன்று 40-வது வணிகர் உரிமை முழக்க மாநாடு: கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-05-05 05:32 GMT   |   Update On 2023-05-05 05:32 GMT
  • 40-வது மாநாட்டை குறிக்கும் வகையில் 40 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.
  • மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

ஈரோடு:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது வணிகர் தினத்தையொட்டி வணிகர் உரிமை முழக்க மாநாடு இன்று ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் தொடங்கியது. மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தங்கினார்.

மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வணிகக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. 40-வது மாநாட்டை குறிக்கும் வகையில் 40 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.

மாநிலத்தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் வணிகக்கொடியை ஏற்றி வைத்தனர்.

அகில இந்திய வணிகர் சம்மேளனம் தேசிய தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டினை தொடங்கி வைத்தனர். ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத் தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 39-வது வணிகர் தினம் மாநில மாநாட்டை சிறப்பாக திருச்சியில் நடத்திய நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

முன்னதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாநாட்டு திடலில் அமைந்துள்ள ஷாப்பிங் ஸ்டால்களை நேற்று மாலை திறந்து வைத்தார். தமிழக அனைத்து சிறு, குறு நிறுவனங்கள் தங்களின் நிறுவனப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 115-க்கும் மேற்பட்ட ஷாப்பிங் ஸ்டால்களை அமைத்துள்ளன. அந்த ஸ்டால்களை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.

Tags:    

Similar News