தமிழ்நாடு

500-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் பள்ளி மாணவர்களுடன் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-12-02 08:10 GMT   |   Update On 2023-12-02 08:10 GMT
  • புதிய சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.
  • அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் செல்லும் சாலை பழுதடைந்து சேதம் அடைந்துள்ளது. இதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு புதிய சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் புதிய சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

இதே போல் வனப்பகுதியில் சுற்றி அகழிகள் அமைக்காமல் யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும், இது குறித்து வனத்துறையினரிடம் கூறினால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வலியுறுத்தியும், இதே போல் மலைப்பகுதியில் தொலை தொடர்பு சேவை இல்லாததால் அவசரகால உதவிக்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், இங்கு உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை ஆசனூர் ஆரேப்பாளையம் பிரிவு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் தங்களது குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலை கிராம மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் வாகனங்கள் 2 புறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம், வட்டாட்சியர் ரவிசங்கர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News