அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் - 6 பேருக்கு நீதிமன்ற காவல்
- காஷ்மீரில் பலியான ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று காலை மதுரை வந்தடைந்தது.
- அவரது உடலுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானார். இவரது உடல் இன்று தனி விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது காரில் புறப்பட்டார். மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியேறும்போது அங்கு கூடி இருந்த பா.ஜ.க.வினர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பா.ஜ.கவினர் அஞ்சலி செலுத்தவேண்டும் என கூறியதால் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாகனத்தை முற்றுகையிட்டு அவரது கார் மீது காலணி வீசி தாக்குதலில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.வை சேர்ந்த ஆறு பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் 6 பேருக்கும் ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்கள் 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.