ஜெயலலிதாவுக்கு சொந்தமான 7 கிலோ பாரம்பரிய குடும்ப நகைகள் - சட்ட நிபுணர்கள் கருத்து
- ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க, வைர நகைகளில் 7 கிலோ விற்க கோர்ட்டு விலக்கு அளித்து உள்ளது.
- ஜெயலலிதாவுக்கு அவரது தாய் கொடுத்த பாரம்பரிய நகைகள் என்பதால் விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. அப்போது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 468 வகையான 27 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் 700 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா 1136 பக்க தீர்ப்பு வழங்கினார்.
அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். மேலும் அவர்கள் அனைவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்தார். இதை எதிர்த்து இவர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு இந்த வழக்கு சென்றது.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஆனால் அதற்குள் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் காலாவதியாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. ஆனாலும் மற்ற 3 பேரும் 4 வருட சிறை தண்டனை அனுபவித்து அபராதம் செலுத்த வேண்டியிருந்தது.
மேலும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்கும் வகையில் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்தது.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் எனவும், அதன் மூலம் வரும் பணத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரி சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அரசால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடியை திரட்டுவதற்காக அவரது சொத்துக்களை விற்க நீதித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை அடுத்த மாதம் (மார்ச்) 6, 7-ந் தேதிகளில் தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்க பெங்களூரு 36-வது சிட்டி சிவில் நீதிமன்றம் அறிவித்தது.
மேலும் 27 கிலோவில் 20 கிலோ நகைகளை மட்டும் விற்க வேண்டும் என்றும் மீதியுள்ள 7 கிலோ நகைகள் ஜெயலலிதாவுக்கு அவரது தாய் கொடுத்த பாரம்பரிய நகைகள் என்று கருதப்படுவதால் இவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று அறிவித்தனர். மேலும் ஜெயலலிதா கணக்கு வைத்திருந்த நிறுவனம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ரூ.59 லட்சத்தை ஒப்படைத்தது. மேலும் ஜெயலலிதாவின் நகைகளை பெற தமிழக உள்துறை செயலாளர் வருமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. நகைகளை கொண்டு செல்லும்போது தேவையான பாதுகாப்புடன் வீடியோகிராபர் மற்றும் 6 பெரிய டிரங்க் பெட்டிகளுடன் வரவேண்டும் என்று கூறி உள்ளனர். மேலும் பாதுகாப்புக்காக உள்ளூர் போலீசாரை ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி பெங்களூருவில் இருந்து 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி நகைகள், 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள் என மொத்தமாக 6 பெட்டகங்களில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடி இருக்கலாம் எனத் தெரிகிறது. அவை, தமிழ்நாடு அரசின் கருவூலத்தில் வைக்கப்படும்.
ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க, வைர நகைகளில் 7 கிலோ விற்க கோர்ட்டு விலக்கு அளித்து உள்ளது. ஜெயலலிதாவுக்கு அவரது தாய் கொடுத்த பாரம்பரிய நகைகள் என்பதால் விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே 20 கிலோ நகையை ஏலம் மூலம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதி உள்ள 7 கிலோ நகை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சட்ட நிபுணர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் உண்மையான சட்ட வாரிசாக ஜெ.தீபா உள்ளார். அவரிடம் தான் தற்போது போயஸ் கார்டன் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. எனவே பாரம்பரியமான குடும்ப நகையான இந்த 7 கிலோ நகையும் ஜெ.தீபாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.