நகை மோசடியில் ஈடுபட்ட பெண்கள் உள்பட நிதிநிறுவன ஊழியர்கள் 8 பேர் கைது- 25 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
- ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து மதன்குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
- மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிரேனா (வயது40), சுந்தரலிங்கம் மனைவி ஜெயலெட்சுமி (40) மற்றும் பாக்கியராஜ் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அந்த பணத்தை பங்குசந்தை, நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாக கூறினர்.
மேலும் 10 பவுன் நகை கொடுத்தால் 10 நாட்களில் நகையுடன் ரூ. 10 ஆயிரமும் சேர்த்து கொடுப்பதாகவும், 35 பவுன் நகை கொடுத்தால் கார் வாங்க முன்பணம் கட்டுவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய மதன்குமார் கடந்த மே மாதம் 6-ந்தேதி தனது தாய் மற்றும் சகோதரியிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகளையும், கடந்த 9-ந் தேதி தனது உறவினர்களிடம் இருந்து மேலும் 50 பவுன் தங்க நகைகளையும் வாங்கி கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மதன்குமாருக்கு அவர்கள் 3 பேரும், ரூ.40 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளனர். ஆனால் கார் வாங்க முன்பணம் கட்டவில்லை. இதனால் சந்தேகமடைந்த மதன்குமார் கடந்த ஜூன் 26-ந்தேதி அவர்களிடம் நகைகளை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து மதன்குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மதன்குமார் போலீசில் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கிரேனா, ஜெயலெட்சுமி மற்றும் பாக்கியராஜ் ஆகிய 3 பேரையும் ஜூலை மாதம் 10-ந்தேதி கைது செய்து அவர்களிடம் இருந்து 25 லட்சம் மதிப்புள்ள 69 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி, பிள்ளைமுத்து, லலிதா மற்றும் தலைமை காவலர்கள் சுப்பையா, செந்திவேல் முருகேயன், முதல் நிலை பெண் காவலர் ஜெயலட்சுமி ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதில் மோசடி செய்த தங்க நகைகளை நிதிநிறுவனத்தில் அடகு வைக்க உதவியாக இருந்த அந்நிதிநிறுவன ஊழியர்களான ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்த சந்தியா (24), தூத்துக்குடி புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த கிஷோர் ராகுல் (23), தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகர் பகுதியை சேர்ந்த தங்ககுமார் (31), புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த பெரும்படை பட்டு மாரியப்பன் (31), புதியம்புத்தூர் ஆர். சி. தெருவை சேர்ந்த சுந்தரவிநாயகம் (23), ஓட்டப்பிடாரம் வடக்கு பரும்பூர் பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் (29), புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ராஜலெட்சுமி (27) மற்றும் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (42) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.