தமிழ்நாடு

ஊட்டியில் தென்பட்ட 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வால்நட்சத்திரம்- ஆராய்ச்சியாளர் பரபரப்பு தகவல்

Published On 2024-10-03 04:53 GMT   |   Update On 2024-10-03 04:53 GMT
  • சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ஏராளமான வால் நட்சத்திரங்களும் வலம் வருகின்றன.
  • சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றன.

ஊட்டி:

நவீன அறிவியல் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் மனிதனால் தொடமுடியாத இயற்கையின் பாகங்கள் எத்தனையோ உள்ளன.

அவை ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் அள்ளித் தருபவை என்பது தான் சுவாரசியம். அதில் ஒன்று வானில் தோன்றும் வால்நட்சத்திரங்கள். சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ஏராளமான வால்நட்சத்திரங்களும் வலம் வருகின்றன.

சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றன. அதேபோல் தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த ஏராளமான கலவைகளும் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இதனை தான் வால்நட்சத்திரம் என்கிறோம்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மாலை 6 மணியளவில் மேற்குதொடர்ச்சி மலையொட்டிய ஊட்டியில் மேற்கு வானப்பகுதியில் அரிய வால்நட்சத்திரம் ஒன்று தென்பட்டுள்ளது.

10 நிமிடங்கள் வானில் தென்பட்ட இந்த வால்நட்சத்திரமானது நன்றாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இதனை வெறும் கண்ணால் பார்க்க முடிந்தது. ஆனால் அது என்ன என்பது பலருக்கும் தெரியவில்லை. ஏதோ ஒரு இயற்கை நிகழ்வு அல்லது வானவில் என்று மட்டுமே நினைத்தனர்.

ஆனால் நாசா ஆராய்ச்சியாளரான ஜனார்த்தன் நஞ்சுண்டன் என்பவர் தான் இது இயற்கை நிகழ்வு அல்ல. வானில் தென்பட்டது 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிய வால்நட்சத்திரம் என தெரிவித்துள்ளார்.

ஊட்டியில் உள்ள மேற்கு வானத்தில் கடந்த 1-ந் தேதி மாலை நேரத்தில் ஒரு அரிய நிகழ்வு காணப்பட்டது. இது வழக்கமான இயற்கை நிகழ்வாக இருக்கும் என்று நினைத்தேன்.

மேலும் அது வானவில் நிறங்களை போன்று பல வண்ணங்களில் இருந்ததால் அது வானவில்லாக இருக்கும் என்று தான் நான் முதலில் நினைத்திருந்தேன்.

ஆனால் ஆராய்ச்சி செய்து பார்த்த பின்னர் தான் ஊட்டியில் தென்பட்டது 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வால்நட்சத்திரம் என்பது தெரியவந்தது. இந்த வால்நட்சத்திரமானது பூமியில் இருந்து 129.6 மில்லியன் கி.மீ தொலைவில் இருந்தது.

மாலை 6 மணியளவில் வானில் தெரிந்த வால்நட்சத்திரமானது 10 நிமிடங்கள் வானவில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி சீனாவில் இந்த அரிய வால்நட்சத்திரம் தெரிந்ததை சீனாவில் உள்ள பர்பிள் மவுண்டன் அப்சர்வேட்டரி கண்டுபிடித்தது. மேலும் சீனாவை சேர்ந்த வானியல் புகைப்பட நிபுணரான உபேந்திரா பின்னெல்லி என்பவர் இதனை புகைப்படம் எடுத்து உறுதி செய்துள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்காவில் தெரிந்தது. தற்போது இது மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான நீலகிரியில் தெரியவந்துள்ளது.

இந்த வால் நட்சத்திரமானது சூரியன் வருவதற்கு முந்தைய நேரத்திலோ அல்லது சூரியன் மறையும் நேரத்திலோ தெரியும்.

இந்த வால்நட்சத்திரமானது மீண்டும் வருகிற 12-ந் தேதி வானில் தென்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News