தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 83 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை
- தூத்துக்குடி பீச் ரோடு வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி நகர தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- படகுகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் 2 லோடு ஆட்டோக்களை நிறுத்தி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பீச் ரோடு வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி நகர தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இன்று அதிகாலை தனிப்படை போலீசார் மாணிக்கராஜ், திருமணிராஜ், செந்தில், முத்துப்பாண்டி, மகாலிங்கம் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ரோஜ் பூங்கா அருகே படகுகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் 2 லோடு ஆட்டோக்களை நிறுத்தி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்று அதனை சோதனை செய்தபோது அதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 83 மூட்டைகளில் 4,150 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது.
மேலும் அதை படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் லோடு ஆட்டோக்களை ஓட்டி வந்த நெல்லை மாவட்டம் கூத்தன்குழியைச் சேர்ந்த தினேஷ் (வயது30), எடிசன் (20) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். பின்னர் 2 பேரையும் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து அதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.