தமிழ்நாடு

உவரியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள காட்சி.

நெல்லையில் கடல் அரிப்பால் 9 மீனவ கிராமங்கள் பாதிப்பு- தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை

Published On 2022-07-31 09:50 GMT   |   Update On 2022-07-31 09:50 GMT
  • கடற்கரையில் இருந்து 400 மீட்டர் தூரத்துக்கு தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும்.
  • கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் வந்து கூட்டபனையில் ஆய்வு செய்தனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களில் இயற்கை சீற்றம் மற்றும் கனமழை காரணமாக அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

இங்குள்ள பெரிய தாழையில் தொடங்கி கூட்டப்புளி, பெருமணல், தோமையார்குளம், இடிந்தகரை, கூத்தங்குழி, உவரி, கூடுதாழை உள்ளிட்ட கிராமங்களில் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் தான் இருந்து வருகிறது.

இந்த 9 கிராம மக்களும் கடல் அரிப்பால் மீளா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். சுமார் 100 மீட்டர் தூரம் வரைக்கும் ஏற்படும் கடல் அரிப்பால் இப்பகுதியில் படகுகளை கூட நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

மேலும் கடற்கரையில் உள்ள மிக்கேல் ஆண்டவர் ஆலயம் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலையில் கடல் அரிப்பினால் விளிம்பு நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் விதமாக தூண்டில் வளைவு அமைத்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டு காலமாக இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். அரசு சார்பில் 3 இடங்களில் 50 மீட்டர் தூரத்துக்கு தூண்டில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது அதையும் தாண்டி கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே கடற்கரையில் இருந்து 400 மீட்டர் தூரத்துக்கு தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் வந்து கூட்டபனையில் ஆய்வு செய்தனர்.

மீனவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். ஆனால் ஒரு வருடத்தை நெருங்கி விட்ட நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.

Tags:    

Similar News