இரட்டை குழந்தைகள் பிறந்ததாக பொய் சொல்லி பிரதமர் மோடியை ஏமாற்றிய பாஜக நிர்வாகி தலைமறைவு
- பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்தனர்.
- அப்போது, அஸ்வந்த் பிஜய் என்ற பாஜக தொண்டர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், நிறைவு பெற்ற திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.
அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து உரையாற்றினார்.
இத்தகு முன்னதாக, பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்தனர். அப்போது, அஸ்வந்த் பிஜய் என்ற பாஜக நிர்வாகி மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.
இது தொடர்பாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்,
"சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி நிர்வாகிகளில் ஒருவரான அஸ்வந்த் பிஜய் அவர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார். சற்றுமுன் தான், அவரது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் என்றும், ஆனால் அவர் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை என்றும் என்னிடம் கூறினார். இந்த நேரத்தில் அவர் இங்கு வந்திருக்கக் கூடாது என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசிகளையும் தெரிவித்தேன்.
நமது கட்சியில் கடமை மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கட்சியினரின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது நான் உணர்ச்சிவசப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை அடுத்து யார் இந்த அஸ்வந்த் பிஜய் என பாஜகவினர் மட்டுமில்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவை பூர்விகமாக கொண்ட அஸ்வந்த் பிஜய் தனியார் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என தெரியவந்தது. மேலும் இவர் சென்னையில் வேளச்சேரியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியிடம் கூறியது போல் அஸ்வந்த் பிஜய்க்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியிடம் நன்மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக அவரிடம் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அஸ்வந்த் பிஜய் பொய் சொல்லியுள்ளார். பிரதமரிடம் சொன்ன தகவல் யாருக்கும் தெரியாது என நினைத்திருந்த நிலையில், பிரதமர் மோடியே இந்த நிகழ்வை தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவாக வெளியிட்டதால் அஸ்வந்த் பிஜய் மாட்டிக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அவர் தலைமறைவாகியுள்ளார். இதனை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதே சமயம் பிரதமரிடம் பொய் சொன்ன அஸ்வந்த் பிஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.