வாக்காளர்களுக்கு வெற்றிலை, பாக்குடன் அழைப்பு: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு
- ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
- தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.
பொள்ளாச்சி:
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வா கம், தேர்தல் பிரிவினர் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டு வருகிறது.
பஸ் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடக் கூடிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு செல்பி ஸ்பாட் வைத்து விழிப்புணர்வு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வீடியோவும் ஒளிபரப்பப்படுகிறது.
மேலும் ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அழைப்பது போன்று தேர்தல் தினத்தன்று வாக்களிக்க வருமாறு, அதிகாரிகள் அழைத்து வருகின்றனர்.
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தல்களில் சில இடங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குப்பதிவு இருந்துள்ளது.
அந்த இடங்களை கண்டறிந்து, அங்கு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, தேர்தல் அதிகாரிகள், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வைத்து, தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.
பொள்ளாச்சி சப்-கலெக்டரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்ரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி தேர்தலில் வாக்களிக்க அழைத்தனர். மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எரிவாயு சிலிண்டர், பஸ் நிலையம், ரெயில் நிலையம், உணவு விடுதி ஆகியவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஓட்டி வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.