டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு இடைக்கால தடைகோரி வழக்கு
- போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது.
- வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.
அந்த வகையில், 2024ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது. குரூப்- 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வு அறிவிப்பில், இறுதிவிடை குறித்து, விடைத்தாள் நகல் பெறுவது குறித்த விதிகளை சட்டவிரோதம் அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு முடியும் வரை குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.