தமிழ்நாடு

செங்கல்பட்டில் ரூ.40 கோடி செலவில் பிரமாண்ட புதிய பஸ் நிலையம்- ஒரு ஆண்டில் கட்டி முடிக்க திட்டம்

Published On 2023-09-18 10:51 GMT   |   Update On 2023-09-18 10:51 GMT
  • ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
  • செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நகர பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு பகுதி தற்போது அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியை தாண்டி இப்போது செங்கல்பட்டு பகுதியில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சென்னைக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் மின்சார ரெயில் சேவை உள்ளதால் செங்கல்பட்டு பகுதியில் மக்கள் தொகை பெருக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தற்போது செங்கல்பட்டு பஸ்நிலையம் ஜி.எஸ்.டி.சாலையை ஒட்டி ரெயில் நிலையம் அருகே உள்ளது. இங்கிருந்து மதுராந்தகம், காஞ்சிபுரம், திருவள்ளூர், தாம்பரம், அச்சரப்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் போதிய இடவசதி இல்லாததாலும், வாகன பெருக்கம் காரணமாகவும் செங்கல்பட்டு பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து செங்கல்பட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வெண்பாக்கம் பகுதியில் 14 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு சுமார் ரூ.40 கோடி செலவில் பிரமாண்டமாக புதிய பஸ்நிலையம் அமைய இருக்கிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரி உள்ளது. பஸ்நிலைய பணிகளை ஒரு ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் சுமார் 50 பஸ்களை நிறுத்தும் வகையிலும், சுமார் 67 நான்குசக்கர வாகனங்கள், 782 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் வகையிலும் பார்க்கிங் பகுதி அமைய இருக்கிறது. மேலும் 30 கடைகள், ஓட்டல்கள், பெரியவளாகம், சுற்றுலா தகவல் மையம், டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வெடுக்கும் அறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட இருக்கிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, செங்கல்பட்டு நகரின் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. நிலம் கையகப்படுத்தும் செலவு திட்டத்திற்கு அதிகமாக இருப்பதால், சாலையை விரிவாக்கம் செய்ய முடியாது. எனவே, புதிய கலெக்டர் அலுவலகம் அருகே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால் நகருக்குள் நெரிசல் குறையும் என்றார்.

செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிலையம் மாற்றலாகி வெண்பாக்கம் பகுதிக்கு பஸ்நிலையம் மாற்றபடும். பொது பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நகர பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக ரெயில்வே குடியிருப்பில் உள்ள ஒரு பகுதியும் மற்றும் அருகில் உள்ள சில பகுதிகளை அப்புறப்படுத்தி நகர பஸ்கள் ரெயில் நிலையத்தில் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் படி பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags:    

Similar News