தனியார் கல்லூரி வளாகத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை- 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
- போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- நெல்லை-அம்பை சாலையில் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையை சேர்ந்தவர் ஜூலியஸ்குமார் (வயது41). கட்டிட தொழிலாளி.
இவர் நெல்லை மாவட்டம் மேல திடியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டிட பணிக்காக அங்கே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அவருடன் மேலும் சில தொழிலாளர்களும் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் ஜூலியஸ்குமார் இன்று காலை அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கல்லூரி வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜூலியஸ்குமாருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்த சக ஊழியர்கள் 3 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. அப்போது கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் கிடந்தது. அதனை மோப்ப நாய் கவ்வி எடுத்தது.
அதனை போலீசார் கைரேகை நிபுணர்களிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நெல்லை-அம்பை சாலையில் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் சந்தேகப்படும் படியான யாருடைய நடமாட்டமும் இல்லை. எனவே கொலையாளிகள் கல்லூரியின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதி வழியாக தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
அதன்பேரில் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.