தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்- மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராடிய பொதுமக்கள்

Published On 2024-08-03 04:46 GMT   |   Update On 2024-08-03 04:46 GMT
  • அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித நீராடினர்.
  • காவிரி கரையோர பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சேலம்:

ஆடிப்பெருக்கு நாளில் நெல் விதைத்தால் தைப்பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் விவசாயத்திற்கு ஆதாரமான ஆறு, குளம் உள்பட நீர் நிலைகளைபோற்றும் விதமாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ஆடி மாதம் 18-ம் நாளான ஆடிப்பெருக்கில் காவிரி கரையோரங்களில் மக்கள் திரண்டு வழிபாடு நடத்துகிறார்கள். இதில் ஆண்களும், பெண்களும் அதிகாலையிலே பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கள பொருட்களோடு மேட்டூர் காவிரி கரையில் திரண்டனர். மேட்டூர் காவிரியில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால் மேட்டூர் பகுதியில் கொளத்தூர் செட்டிப்பட்டி, கோடையூர், பண்ணவாடி, மூலக்காடு சென்றாய பெருமாள் கோவில், காவிரி பாலம் முதல் முனியப்பன் கோவில் வரை, எம்.ஜி.ஆர்.பாலம், திப்பம்பட்டி, கீரைக்காரனூர், கூணான்டியூர் ஆகிய 9 இடங்களில் மட்டும் பாதுகாப்பு நிபந்தனைகளுடன் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பகுதிகளில் அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித நீராடினர். புதுமண தம்பதியினர் காவிரியில் புனித நீராடி புதிய தாலியை அணிந்து கொண்டனர். மேலும் புதுமண தம்பதிகள் அருகம்புல் வைத்து ஆற்றில் புனித நீராடி வருகிறார்கள்.

தொடர்ந்து காவிரி ஆற்றில் புனித நீராடி காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் குடும்பத்துடன் அங்கு அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் பக்தர்கள் கோவிலில் உள்ள சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக குடும்பத்தினருடன் வந்து காவிரி ஆற்றில் சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால் காவிரி கரையோர பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் காவிரி கரையோரங்களில் பாதுகாப்பற்ற முறையில் நின்று வேடிக்கை பார்க்கவும், பிற இடங்களில் ஆற்றில் இறங்கி குளிப்பது, கரையில் நின்று புகைப்படம் எடுத்தல், செல்பி எடுத்தல், ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி வரை காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரி கார்டு வைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் வைத்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பேரிடர் மீட்புக்குழுவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

Tags:    

Similar News