search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi perukku"

    • திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
    • தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    ஆடிப்பெருக்கன்று காவிரி ஆற்றங்கரையில் கொலை நடப்பது என்பது, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு அத்தாட்சி.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், கோவை, சிவகங்கை, கன்னியாகுமரி என தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொலை தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.

    விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

    வாரந்தோறும் ராசிப் பலன்கள் போடுவது போல கொலைப் பட்டியல்களை நாளிதழ்கள் பிரசுரிக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்? எப்படி தினந்தோறும் அச்சமின்றி வேலைக்கு செல்ல முடியும்? எப்படி நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்? எப்படி புதிய தொழில் முதலீடுகள் வரும்?

    "தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது நீங்கள் உங்களுக்காக செய்துகொள்ளும் செய்திதாள் அல்லது தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக வராது; சீரான சட்டம் ஒழுங்கு தான் அதற்கு அடிப்படை" என்பதை உணர்ந்து, அஇஅதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டும் செலுத்தும் கவனத்தை சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் இனியாவது செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    • பவானி காவிரி கரை பகுதிகளில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • கூடுதுறை அழகிய தீவு போல் காட்சியளிக்கிறது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம்.

    அதேபோல் ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபாடு மேற்கொள்வதும், ஆடி 18 அன்று தம்பதியர் புதிய தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும் காவிரி தாயை வழிபாடு மேற்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவு நிரம்பிய நிலையில் உபரி நீராக அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி காவிரி கரை பகுதிகளில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது. பவானி கூடுதுறை இரட்டை விநாயகர் சன்னதியின் மேல் படிக்கட்டு முதல் தண்ணீர் தொட்டு செல்கிறது. இதனால் கூடுதுறை அழகிய தீவு போல் காட்சியளிக்கிறது.

    இதையடுத்து பக்தர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மூலம் காவிரி ஆற்றுக்கு பக்தர்கள் செல்லாத வகையில் தகர செட் அமைத்து அடைக்கப்பட்டு பாதுகாப்பு செய்து உள்ளனர். அதேபோல் ஆண், பெண் என பக்தர்கள் தனித்தனியாக குளிக்கும் வகையில் 2 இடங்களில் சமர்பாத் அமைத்து குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தொட்டிகள் அமைத்து குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் திதி, மற்றும் தர்ப்பணம் கொடுக்க பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் பலர் கூடுதுறைக்கு வந்து இருந்தனர். இதை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக ஷவர் பாத் மற்றும் தொட்டிகளில் நிரப்பட்ட தண்ணீர்களில் புனித நீராடினர். புதுமண தம்பதிகள் பலர் வந்து ஷவர்களில் புனித நீராடி சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மனை வழிபட்டனர்.

     

    தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். மேலும் பலர் கன்னிமார் பூஜை செய்தனர்.

    இதே போல் அம்மாபேட்டை காவிரி கரை பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அம்மாபேட்டை சொக்கநாதன் கோவில் காவிரி கரை படித்துறை, சிங்கம் பேட்டை, காடப்பநல்லூர், காட்டூர், நெரிஞ்சிபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    அதில் பக்தர்கள் பலர் புனித நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். மேலும் பக்தர்கள் பலர் ஷவர்களில் குளித்து விட்டு சொக்கநாதரை வழிபட்டனர். இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் இன்று பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். ஆனால் அங்கு பொதுமக்கள் உள்ளே செல்லாத வகையில் தடுப்பு அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று மக்கள் காவிரி தாய் வழிபாடு நடத்துவார்கள். ஆனால் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் ஏமாற்றுத்துடன் சென்றனர்.

    மேலும் இந்த பகுதியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் மக்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிப்பட்டு இருந்தது. இதையடுத்து காலை முதலே மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    மேலும் பொதுமக்கள் கருங்கல்பாளையம் காளிங்கராயன் வாய்க்காலில் பக்தர்கள் பலர் தடையை மீறி புனித நீராடி காவிரி தாய் வழிபாடு நடத்தினர். பொதுமக்கள் பலர் காளிங்கராயன் வாய்க்காலில் திதி, தர்ப்பணமும் கொடுத்தனர்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கவில்லை. ஆனால் பக்தர்கள் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். மேலும் பக்தர்கள் பலர் கொடுமுடிக்கு வந்து மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
    • தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தமிழகம் மட்டுமன்றி தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்கள் குடும்பத்தில் உள்ள சனி தோஷம் நீங்கவும், திருமணத் தடைகள் காரியத் தடைகள் விலகவும் இங்கு வந்து பரிகாரம் செய்து சனீஸ்வரனை வழிபட்டு செல்கின்றனர்.

     

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வருகின்ற 5 சனிக்கிழமைகளில் குச்சனூர் சனீஸ்வரர் பெருமான் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இன்று ஆடி 3-வது சனிக்கிழமை மற்றும் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு அதிகாலையிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தங்கள் தோஷம் விலக அருகில் உள்ள சுரபி நதிக்கரையில் நீராடி காகத்திற்கு எள் சாதம் வைத்து நல்லெண்ணெய் மற்றும் எள் தீபங்கள் ஏற்றி காக வாகனம் வாங்கி தலையை சுற்றி வைத்து பரிகாரங்கள் செய்தனர்.

    • நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    இன்று ஆடி 18, ஆடி பெருக்கை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    ஆடி மாதம் 18ம் தேதி ஆடி பெருக்கு என்று நம் முன்னோர்கள் கருதி இந்த நாளை புனித நாளாக கருதி விவசாய பணிகள் தொடங்குவது, வீடுகள் கட்டுமான பணிக்கு நாள் செய்வது என செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30க்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 

    • 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
    • 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    அமணலிங்கேஸ்வரர் கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.

    அத்துடன் அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

    அதுமட்டுமின்றி அமாவாசைக்கு முன்தினம் திருமூர்த்தி மலைக்கு மாட்டு வண்டிகளில் வருகின்ற பக்தர்கள் இரவு முழுவதும் கோவில் மற்றும் அணைப்பகுதியில் தங்கி கொள்கின்றனர். பின்னர் காலையில் எழுந்து அருவிக்கு சென்று குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு திரும்பிச் செல்வார்கள்.

    அந்த வகையில் இன்று திருமூர்த்தி மலையில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு வழிபாடு மற்றும் நாளை நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முதல் பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து குவிந்தனர். களைப்படைந்த மாடுகளுக்கு பெருமாள் கோவில் அருகில் வண்டிகளுடன் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலை பகுதியில் மாட்டு வண்டிகள் அதிக அளவில் காணப்படுகிறது.

    ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் அதிக அளவில் திருமூர்த்திமலைக்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் திருமூர்த்திமலை பகுதியில் 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணியில் உடுமலை சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித நீராடினர்.
    • காவிரி கரையோர பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    ஆடிப்பெருக்கு நாளில் நெல் விதைத்தால் தைப்பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் விவசாயத்திற்கு ஆதாரமான ஆறு, குளம் உள்பட நீர் நிலைகளைபோற்றும் விதமாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி ஆடி மாதம் 18-ம் நாளான ஆடிப்பெருக்கில் காவிரி கரையோரங்களில் மக்கள் திரண்டு வழிபாடு நடத்துகிறார்கள். இதில் ஆண்களும், பெண்களும் அதிகாலையிலே பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கள பொருட்களோடு மேட்டூர் காவிரி கரையில் திரண்டனர். மேட்டூர் காவிரியில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    இதனால் மேட்டூர் பகுதியில் கொளத்தூர் செட்டிப்பட்டி, கோடையூர், பண்ணவாடி, மூலக்காடு சென்றாய பெருமாள் கோவில், காவிரி பாலம் முதல் முனியப்பன் கோவில் வரை, எம்.ஜி.ஆர்.பாலம், திப்பம்பட்டி, கீரைக்காரனூர், கூணான்டியூர் ஆகிய 9 இடங்களில் மட்டும் பாதுகாப்பு நிபந்தனைகளுடன் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த பகுதிகளில் அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித நீராடினர். புதுமண தம்பதியினர் காவிரியில் புனித நீராடி புதிய தாலியை அணிந்து கொண்டனர். மேலும் புதுமண தம்பதிகள் அருகம்புல் வைத்து ஆற்றில் புனித நீராடி வருகிறார்கள்.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் புனித நீராடி காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் குடும்பத்துடன் அங்கு அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் பக்தர்கள் கோவிலில் உள்ள சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக குடும்பத்தினருடன் வந்து காவிரி ஆற்றில் சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால் காவிரி கரையோர பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    மேலும் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் காவிரி கரையோரங்களில் பாதுகாப்பற்ற முறையில் நின்று வேடிக்கை பார்க்கவும், பிற இடங்களில் ஆற்றில் இறங்கி குளிப்பது, கரையில் நின்று புகைப்படம் எடுத்தல், செல்பி எடுத்தல், ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி வரை காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரி கார்டு வைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் வைத்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பேரிடர் மீட்புக்குழுவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

    • இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு வரும் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தொடர்ந்து 5-வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஆண்டுதோறும் ஆடி 18-ந்தேதி மட்டும் பொதுமக்கள் பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாளில் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் சென்று பொதுமக்கள் பார்வையிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள்.

    ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து பவானிசாகர் அணை மீது சென்று அணை நீர்த்தேக்க பகுதியை பார்வையிடுவார்கள். மற்ற நாட்களில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை.

    இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு செல்லவில்லை.

    இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு வரும் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நிச்சயமாக பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த ஆண்டும் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அதே சமயம் ஆடிப்பெருக்கு நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 5-வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து பவானிசாகர் அணை உதவி பொறியாளர் தமிழ் பாரத் கூறும்போது, பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 91 அடிக்கும் மேல் உள்ளது. இதனால் அணை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆண்டும் பவானிசாகர் அணையின் நீர் தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    தற்போது பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    • அருள் வந்த பூசாரி தேங்காய்களை பக்தர்களின் தலையில் உடைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும், மக்கள் நலம் பெறவும் வேண்டி காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே உள்ள காவேரி ஆற்றில் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    கூடச்சேரி, பில்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் கோவில்களில் இருந்த பழைய ஆயுதங்களை காவிரி ஆற்றுக்கு கொண்டு வந்து அதனை காவிரியில் சுத்தம் செய்தனர். பின்னர் ஆயுதங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    அதனை தொடர்ந்து பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அருள் வந்த பூசாரி தேங்காய்களை பக்தர்களின் தலையில் உடைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மாலை 5 மணியளவில் வேலூர் சோழன் பாய்ஸ் ஏ. இயக்க மீனவர் சங்கம் சார்பில் பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் 26-ம் ஆண்டு தொடர் பரிசல் போட்டி நடைபெற்றது.

    இதில், பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோவில் காவிரி கரையில் இருந்து மறுகரையில் உள்ள கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி வரை சென்று மீண்டும் காசி விஸ்வநாதர் கோவில் பகுதியை வந்தடைந்தது.

    இதில் முதல் பரிசை பெற்ற பரமத்திவேலூரைச் சேர்ந்த ராஜாவுக்கு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு பெற்ற கணேசனுக்கு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு பெற்ற விஸ்வாவுக்கு ரூ.5 ஆயிரம், 4-ம் பரிசு பெற்ற முட்டி என்கிற கணேசனுக்கு ரூ. 3 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    பரிசு தொகையினை டி.எஸ்.பி ராஜமுரளி வழங்கி பாராட்டினார்.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும், மக்கள் நலம் பெறவும் வேண்டி காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக காசி விஸ்வநாதர் கோவிலில் மோட்ச தீபத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பரிசல் மூலம் காவிரி ஆற்றின் மத்திய பகுதிக்கு சென்று விடப்பட்டது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில், வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம், நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நாளை கிடாய் வெட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கொல்லபட்டி கிராமம் ஜி.குரும்பபட்டியில் பழமையான மகாலட்சுமி அம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த இருந்த பக்தர்கள் நீண்டவரிசையில் நின்றனர். அவர்களை கோவில் பூசாரி சாட்டையால் அடித்தார். அதனைதொடர்ந்து கோவில் முன்பு அமரவைக்கப்பட்ட பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைக்கப்பட்டது.

    இந்த திருவிழாவை காண சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை கிடாய் வெட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு பத்திரப்பதிவு செய்ய 200 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும்.
    • அலுவலகம் முன்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது.

    குன்றத்தூர்:

    குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட குன்றத்தூர், மலையம்பாக்கம், நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லசேரி, கோவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுடைய நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தை நாடுவது வழக்கம், வழக்கமாக குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு பத்திரப்பதிவு செய்ய 200 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும்.

    அதில் அதிகபட்சமாக 100 முதல் 120 வரை பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம்.

    நிலம் வாங்குபவர்கள் ஆடிப்பெருக்கன்று பத்திரப்பதிவு செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை முதலே அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர். அலுவலகம் முன்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது.

    நேற்று ஒரு நாள் மட்டும் பத்திரப்பதிவு செய்ய 214 டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. அதில் 160 பேர் பத்திரப்பதிவு செய்தனர்.

    • கோவிலில் இருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.
    • நம்பெருமாள் அணிந்திருந்த மாலை, புடவை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் காவிரியில் விடப்பட்டது.

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி நதி பாயும் பகுதிகள் முழுவதும் பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கி வழிபடுவது வழக்கம். அதேபோல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாள், காவிரித் தாயாருக்கு ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் அம்மா மண்டபம் படித்துறையில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார்.

    அவ்வகையில் ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள், காவிரி தாய்க்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 4 மணிவரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதன்பின்னர் நம்பெருமாள் அணிந்திருந்த மாலை, புடவை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளங்கள் முழங்க காவிரி படித்துறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சீர்வரிசை பொருட்களை காவிரி தாய்க்கு வழங்கும் வகையில், காவிரி ஆற்றில் விடப்பட்டு, சீர்வரிசை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி தாயையும், நம்பெருமாளையும் தரிசனம் செய்தனர்.

    பின்னர் நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    • தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு பல ஆயிரம் பேர் வந்து குவிந்திருந்தனர்.
    • அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே பொது மக்கள் முண்டியடித்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அனைவரது வாழ்விலும் காவிரி போல மகிழ்ச்சியும், வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று ஆடிப்பெருக்கு நன்னாளில் காவிரிக்கு படையிலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். மேலும் காவிரி கரையோர மக்கள் கோவிலில் உள்ள சாமி சிலைகளையும் காவிரி ஆற்றுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து நீராட்டி மீண்டும் மேள தாளங்கள் முழங்க கோவிலுக்கு எடுத்து செல்வார்கள்.

    அந்த வகையில், காவிரி கரையோர மக்கள் இன்று அதிகாலை முதலே மேட்டூர் காவிரிக்கு சாரை சாரையாக வர தொடங்கினர். இதனால் காவிரி கரையோர பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. பெரும்பாலான பக்தர்கள் மேட்டூர் காவிரியில் நீராடி மகிழ்ந்தனர்.

    மேலும் பக்தர்கள் தங்களது குல தெய்வங்களை தலையில் சுமந்த படி மேள தாளங்கள் முழங்க மேட்டூருக்கு பக்தர்கள் புடை சூழ நடந்தே வந்தனர். அவர்கள் சாமி சிலைகளை காவிரியில் நீராட்டி மீண்டும் தங்களது கிராமங்களுக்கு மேளதாளங்களுடன் எடுத்து சென்றனர்.

    புதுமண தம்பதியர் தங்களது திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து வழிபட்டு காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். இதற்காக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு பல ஆயிரம் பேர் வந்து குவிந்திருந்தனர்.

    மேட்டூருக்கு வந்த பக்தர்களில் சிலர் ஆடு, கோழிகளை பலியிட்டு மேட்டூர் அணைக்கட்டு முனியப்பனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆடு, கோழிகளை சமைத்து அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினர்.

    அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே பொது மக்கள் முண்டியடித்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி மேட்டூரில் பூங்கா சாலை, கொளத்தூர் சாலைகள் உள்பட பல்வேறு சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காட்சி அளித்தது. அணை பூங்காவிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

    பொது மக்கள் நீராட காவிரி பாலப்பகுதியில் உள்ள 2 படித்துறைகள், மட்டம் பகுதியில் உள்ள 3 படித்துறைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதிகளில் அதிக அளவில் பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர். காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் மற்ற பகுதிகளில் குளிக்க அனுமதி அளிக்கவில்லை.

    மேட்டூர் நகராட்சி சார்பில் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக உடை மாற்றும் அறைகள், கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம், டி.எஸ்.பி. மரியமுத்து ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் 20 பேர் காவிரி கரையில் படகுகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். மேலும் 5 பரிசல்கள், ரப்பர் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்காலிக புறக்காவல் நிலையம், முதல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இது தவிர 12 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு காவல் உதவி மையத்தில் இருந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    திருடர்கள், குற்றவாளிகளை கண்காணிக்க சாதாரண உடையில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆடிப்பெருக்கு விழாவவையொட்டி ஏராளமான தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×