எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றியபோது 10 நிமிடங்கள் வானத்தில் வட்டமடித்து பூ மழை தூவிய ஹெலிகாப்டர்
- கொடிக்கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்.
- மாலையில் 10 நிமிடம் ஹெலிகாப்டரில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரையில் லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு இன்று காலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாநிலம் முழுவதிலும் இருந்து கட்சியினர் குவிந்துள்ளனர்.
அ.தி.மு.க. மாநில மாநாட்டை இதுவரை நடத்திடாத வகையில் மிக பிரமாண்டமாகவும், எழுச்சியோடும் நடத்த கட்சி நிர்வாகிகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் தொடங்கி, மாநாட்டுக்கு கட்சியினரை அழைத்து வருவது வரை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுரைகளை வழங்கினார்.
மாநாட்டின் தொடக்கமாக திடலின் நுழைவு வாயில் பகுதியில் அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டை குறிக்கும் வகையில் 51 அடி உயரத்தில் பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கொடியேற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி காலை 8.00 மணிக்கு அவர் தங்கியிருந்த தனியார் ஓட்டலில் இருந்து புறப்பட்டார்.
வழிநெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்கள் அவரை கும்பிட்டவாறு உற்சாகமாக வரவேற்றனர். அதனை புன்னகையுடன் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சுமார் 45 நிமிட பயணத்துக்கு பிறகு அவர் மாநாட்டு திடலை வந்தடைந்தார்.
காலை 8.45 மணிக்கு கட்சியின் 51 அடி உயர கொடிக்கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்.
அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டு பூ மழை பொழிந்தது. இதற்காக மாநாட்டு பந்தல் அருகே மைதானத்தில் நேற்று மாலை ஹெலிகாப்டர் வந்து நிறுத்தப்பட்டது.
அதன்படி இன்று காலை மாநாட்டு திடலில் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றியபோது சுமார் 10 நிமிடங்கள் வரை வானத்தில் வட்டமடித்த ஹெலிகாப்டர் மழை சாரல் போன்று பூக்களை தூவியது.
இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை சென்னை மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர். அதேபோல், மாலை 4 மணிக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுபோன்ற வரவேற்பு ஏற்பாடுகள் முதன் முதலாக அ.தி.மு.க.வினர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மாலையிலும் 10 நிமிடம் ஹெலிகாப்டரில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.