தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவை கூட்டியதே செல்லாது: சென்னை ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

Published On 2022-07-07 10:48 GMT   |   Update On 2022-07-07 10:48 GMT
  • உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு நகலை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்ததையடுத்து விசாரணை தொடங்கியது.
  • 5 ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளரை ஓரங்கட்டிவிட முடியாது என ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை:

ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக அதிமுகவில் ஏற்பட்ட மோதல் நீடித்து வரும் நிலையில், வரும் 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு நகலை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்ததையடுத்து விசாரணை தொடங்கியது.

உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தனி நீதிபதியை அணுக உத்தரவிட்டதாக ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றமே அனுமதித்துள்ள நிலையில், நாங்கள் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது:-

தற்போது பொதுக்குழு கூட்டியதே செல்லாது என்பதே எங்கள் வழக்கு. இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காகவே இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளரை ஓரங்கட்டிவிட முடியாது. பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்த நோட்டீசில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருப்பதாக கூறப்படவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற விவகாரங்களை உயர் நீதிமன்றத்தில் எழுப்பலாம் என தெரிவித்துள்ளது. பொதுக்குழுவை கூட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், பொதுக்குழுவில் விதிகளை மீற வாய்ப்பு உள்ளது.

நீதிபதி: அதற்கு நீங்கள் உச்ச நீதிமன்றம்தான் செல்லவேண்டும். மற்ற விவகாரங்கள் என எதை குறிப்பிட முடியும்?

ஓபிஎஸ் வழக்கறிஞர்: கூட்டத்திற்கு பாதுகாப்பு கோருவது உள்ளிட்ட விவகாரங்கள்தான்

எடப்பாடி வழக்கறிஞர்: பொதுக்குழு கூட்டம் நடத்தும் உரிமையை பறிக்கக் கூடாது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும்.

இவ்வாறு வாதம் நடந்தது.

Tags:    

Similar News