15 நாட்களுக்குப் பிறகு மேகமலை, சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
- அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
- கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியில் குளிக்க ஏராளமானோர் திரண்டனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டி பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மேலும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை சீசனின்போது அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இங்கு புனிதநீராடி செல்கின்றனர். கடந்த மாதம் சுற்றுலா வந்த சென்னை மாணவி மரக்கிளை முறிந்து விழுந்ததில் பலியானார். இதனை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 27ம் தேதி கேரள வனப்பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் அரிசிகொம்பன் யானை புகுந்தது. கம்பம் நகரில் அட்டகாசம் செய்து பின்னர் சுருளிபட்டி பகுதியில் முகாமிட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் அங்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது யானை அச்சம் முழுவதும் விலகியுள்ளதால் சுருளி அருவி மற்றும் மேகமலைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியில் குளிக்க ஏராளமானோர் திரண்டனர்.