தமிழ்நாடு

9 மாதங்களுக்கு பிறகு திரவுபதி அம்மன் கோயில் சீல் அகற்றம்

Published On 2024-03-22 01:48 GMT   |   Update On 2024-03-22 01:58 GMT
  • கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக மட்டும் திறக்க உத்தரவு.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தலித் மக்களை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோயிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில், நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் என்று அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். 

இதனையடுத்து, மூடப்பட்ட திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக மட்டும் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், திரவுபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

9 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒருகால பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சந்திரசேகர் என்ற அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், பொது மக்கள் கோயிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News