வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் சுற்றிய மக்னா யானை- 40 கி.மீ பயணித்து மதுக்கரை வனப்பகுதிக்கு வந்தது
- வனத்தில் விடப்பட்ட மக்னா யானையானது ஒரே இடத்தில் நிற்காமல் தொடர்ந்து சுற்றி திரிந்தது.
- யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொள்ளாச்சி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஈச்சம்பள்ளத்தில் மக்னா யானை விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தது.
யானையை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
பின்னர் யானை பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனத்தில் விடப்பட்டது. 2 குழுவினர் இந்த யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
வனத்தில் விடப்பட்ட மக்னா யானையானது ஒரே இடத்தில் நிற்காமல் தொடர்ந்து சுற்றி திரிந்தது.
இந்நிலையில் மக்னா யானை நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியை விட்டு வெளியேறி சேத்துமடை பகுதிக்கு வந்தது. தொடர்ந்து மாரப்ப கவுண்டன்புதூர், செம்மேடு, திம்பங்குத்து தப்பட்டை கிளவன்புதூர், ராம நாதபுரம், ராமபட்டினம், தேவம்பாடிவலசு உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தது.
ஊருக்குள் யானை வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இருப்பினும் வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து வந்ததால் சற்று நிம்மதி அடைந்தனர். மக்னா யானை நேராக கோவிந்தபுரம் கிராமத்தை நோக்கி வந்தது. அப்போது அங்கு யானையை பார்க்க மக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். அவர்கள் யானையை புகைப்படம் எடுத்தனர்.
திடீரென யானை மக்களை நோக்கி சென்றது. இதனை பார்த்ததும் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை யாரையும் ஒன்றும் செய்யாமல் நடந்து சென்றது. பின்னர் யானை அங்கிருந்து பயணமாகியது.
கோவிந்தாபுரத்தை தாண்டியதும் வரும் வழியில் இருந்த தடுப்பணையை கண்டதும் யானைக்கு உற்சாகம் ஏற்பட்டது.
உடனே அங்கு ஓடிய யானை தடுப்பணைக்குள் இறங்கி தண்ணீரை குடித்தது.
களத்தூர் பகுதிக்கு வந்த யானை அங்குள்ள புதருக்குள் சென்று சிறிது நேரம் படுத்து உறங்கியது. பின்னர் மீண்டும் எழுந்து கே.கே.புதூர், பொள்ளாச்சி, ஆத்து பொள்ளாச்சி, புரவி பாளையம் பகுதியை நோக்கி நடந்து வந்தது.
யானை சில தூரங்கள் வனத்தின் வழியாகவும், சில தூரங்கள் சாலைகள் வழியாகவும் நடந்து வந்தது.
இதன் காரணமாக யானையை பின் தொடர்ந்து 75 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் கண்காணித்து கொண்டே வந்தனர். அவர்களுக்கு உதவியாக ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 50 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் குடியிருப்பு பகுதி மற்றும் சாலை வழியாக வந்த போது மக்களுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு பாதுகாப்பாக இருக்கும்படி கூறினர்.
பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை நடக்க தொடங்கிய மக்னா யானை பல கிராமங்களை கடந்து 40 கி.மீ தூரம் பயணித்து இன்று காலை கோவை மதுக்கரை வனப்பகுதிக்கு வந்துள்ளது.
தற்போது யானை போடிபாளையம் பகுதியில் நிற்கிறது. தொடர்ந்து யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் யானையின் நட மாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.