தமிழ்நாடு

பணியில் ஒழுங்கீனம்- தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியர் இடமாற்றம்

Published On 2024-09-10 07:41 GMT   |   Update On 2024-09-10 07:41 GMT
  • 2 பேரும் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
  • பொதுமக்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டது.

கொடைக்கானல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி பாரதி அண்ணாநகர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக இருப்பவர் வனிதா. உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் சேதுமுருகன். இவர்கள் 2 பேரும் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

வாரத்தில் 1 நாள் கூட தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வருவதில்லை என்றும், மாணவர்களின் கோரிக்கை குறித்து ஆசிரியர்களோ, பெற்றோர்களோ புகார் அளிக்கச் சென்றால் அங்கு யாரும் இருப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தலைமை ஆசிரியைக்கு உடந்தையாக உதவி தலைமை ஆசிரியரும் செயல்பட்டதால் அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த மாதம் 20-ந் தேதி மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தபோது பொதுமக்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கொடைக்கானலில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகாருக்கு உள்ளான வில்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து தலைமை ஆசிரியை வனிதாவையும், உதவி தலைமை ஆசிரியர் சேதுமுருகனையும் பணி இடமாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி தலைமை ஆசிரியை வனிதா அடுக்கம் ஊராட்சி சாமக்காட்டு பள்ளம் பகுதியில் உள்ள பள்ளிக்கும், உதவி தலைமை ஆசிரியர் சேதுமுருகன் பூண்டி பகுதியில் உள்ள பள்ளிக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News