தமிழ்நாடு (Tamil Nadu)

26 மண் குவாரிகளை மீண்டும் திறந்தால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகும் - அன்புமணி

Published On 2024-05-17 06:12 GMT   |   Update On 2024-05-17 06:12 GMT
  • தமிழக அரசு அதன் பார்வையையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
  • கட்டுமானப் பணிகளின் நலனுக்காக என்று கூறி மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறப்பதும் மக்கள் நல அரசுக்கு அழகல்ல.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்ட பல காரணங்களால் மூடப்பட்ட 26 ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசு மீண்டும் திறக்க தீர்மானித்துள்ள 26 மணல் குவாரிகளும் காவிரி பாசன மாவட்டங்களில் தான் அமையவுள்ளது. அவற்றில் 20 மணல் குவாரிகள் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு, பின்னர் மூடப்பட்டவை ஆகும்.

மீண்டும், மீண்டும் மணல் குவாரிகளைத் திறப்பது தமிழ்நாட்டை, குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களை நிரந்தர பாலைவனமாக மாற்றிவிடும்.

தமிழக அரசு அதன் பார்வையையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் பெருகி விடும் என்று கூறி மதுவின் விற்பனையை அதிகரிப்பதும், கட்டுமானப் பணிகளின் நலனுக்காக என்று கூறி மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறப்பதும் மக்கள் நல அரசுக்கு அழகல்ல. தமிழகத்தின் இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தையும், மக்கள் நலனையும் பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News