தமிழ்நாடு

பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க.வினரை சந்தித்து விட்டு வெளியே வந்த அன்புமணி ராமதாஸ். அருகில் ஜி.கே.மணி மற்றும் பலர் உள்ளனர்.

நெய்வேலியில் இருந்து என்.எல்.சி. நிர்வாகம் வெளியேற வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2023-08-04 08:40 GMT   |   Update On 2023-08-04 08:40 GMT
  • அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் டெல்லி சென்று நிலக்கரி இறக்குமதி செய்ய கோரிக்கை வைக்கட்டும்.
  • சட்டமன்றத்தில் புதிய நிலக்கரி சுரங்கம் வராது என முதலமைச்சர் உறுதிகொடுத்தார்.

நெல்லை:

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து பா.ம.க. சார்பில் கடந்த 28-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சி நிர்வாகிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

இதைத்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக பா.ம.க.வை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி அவர்களில் 20 பேரை பாளை மத்திய சிறையில் நேற்று இரவு அடைத்தனர். அவர்களை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான மூலமாக இன்று காலை அன்புமணி ராமதாஸ் வந்து சேர்ந்தார்.

அங்கிருந்து காரில் நெல்லை புறப்பட்டு வந்த அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கட்சியினரை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெய்வேலியில் என்.எல்.சி.க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் மீது இந்திய தண்டனை சட்டம் 307, 506 உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட யாரும் எந்த தப்பும் செய்யாதவர்கள். கைது செய்யபட்டவர்கள் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் கிடையாது. கடலூரில் இருந்து அவர்களை மாற்று சிறைக்கு மாற்ற என்ன காரணம்?

என்.எல்.சி. விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன் என தெரியவில்லை. 3-வது என்.எல்.சி. சுரங்கத்திற்கு எந்தவித எதிர்ப்பும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. புதிய சுரங்கம் அமைக்கும் இடம் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலத்திற்குள் வருகிறது. காவிரி டெல்டா பகுதியில் எந்தவித சுரங்கமும் தொடங்கமாட்டோம் என சொல்லிய முதலமைச்சர் என்.எல்.சி விவகாரத்தில் அமைதியாக உள்ளார்.

என்.எல்.சி. விவகாரம் மண் தொடர்பான பிரச்சனை. தமிழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சனை. விவசாயிகள் நண்பன் என தமிழக அரசு இனி சொல்லக்கூடாது. எங்கள் கூட்டத்தின் மீது சமூக விரோதிகள் புகுந்ததன் காரணமாக தான் அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. என்.எல்.சியில் இனியும் போராட்டம் நடத்தக்கூடாது என்பது தான் அரசு மற்றும் காவல் துறையின் நோக்கம். 64, 750 ஏக்கர் விளைநிலங்களை என்.எல்.சிக்கு தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளது.

மத்திய அரசை இந்த விவகாரம் தொடர்பாக வலியுறுத்தி வருகிறோம். நான் தனியாக இதனை செய்ய முடியாது. என்.எல்.சிக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் எந்த விவசாயிக்கும் கிடையாது.

நெய்வேலியில் இருந்து என்.எல்.சி. வெளியேற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அனைத்து விவகாரத்திலும் பா.ஜ.க.வை எதிர்க்கும் தி.மு.க. என்.எல்.சி.க்கு மட்டும் ஏன் ஆதரவாக இருக்கிறது.

2026-ல் பா.ம.க மற்றும் அதன் நோக்கம் உள்ள கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு. அதற்கான நடவடிக்கைகள் 2024-ல் தொடங்கும்

அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் டெல்லி சென்று நிலக்கரி இறக்குமதி செய்ய கோரிக்கை வைக்கட்டும். நெய்வேலி தொடர்பான போராட்டமே மத்திய, மாநில அரசுகளை கண்டித்துதான் நடக்கிறது. தமிழகத்தில் இருக்கும் அனைவரும் என்.எல்.சிக்கு எதிராக போராட்டம் நடத்தவேண்டும்.

சட்டமன்றத்தில் புதிய நிலக்கரி சுரங்கம் வராது என முதலமைச்சர் உறுதிகொடுத்தார். ஆனால் இந்த விவகாரம் நடக்கும் நிலையில் எந்த பதிலும் இல்லை. தொடர்ந்து எங்கள் போராட்டம் கடுமையான முறையில் நடக்கும். இந்த பிரச்சனை தேர்தலுக்காக நடத்தப்பட்ட போராட்டமல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. அருள், தருமபுரி தொகுதி எம்.எல்.ஏ. வெங்டேஸ்வரன், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவகுமார், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம், செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு, நெல்லை மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News