தமிழ்நாடு (Tamil Nadu)

அழாதேடா... சிரி... சிறுவனை அருகில் அழைத்து "செல்பி" எடுத்து மகிழ்ந்த அன்புமணி

Published On 2023-11-27 08:00 GMT   |   Update On 2023-11-27 08:00 GMT
  • மேடையில் இருந்த அன்புமணியுடன் செல்பி எடுக்க அந்த சிறுவன் ஆசைப்பட்டு உள்ளான்.
  • வா... உனக்கு ‘செல்பி’ தானே தேவை என்றபடி செல்போனில் படம் பிடித்தார்.

சென்னை:

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், நடிகர், நடிகைகளை பார்க்க நேர்ந்தால் அவர்களுடன் கைகுலுக்கவும், செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டுவார்கள். இதில் வயது வித்தியாசம் என்பது கிடையாது.

அரசியல் தலைவர்களும் அவ்வாறு வருபவர்களுடன் சளைக்காமல் போஸ் கொடுத்து அவர்களது ஆசையை நிறைவேற்றி வைப்பது வாடிக்கை.

அப்படியும் கூட்டத்தில் சிக்கி முண்டியடித்து போட்டோ எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்பவர்களும் உண்டு. அவ்வாறு ஏமாறுபவர்கள் பெரியவர்கள் என்றால் சரி பரவாயில்லை என்று விட்டு விடுவார்கள்.

சிறுவர்கள் என்றால் தாங்க முடியாமல் அழுதே விடுவார்கள். அப்படி அழுத சிறுவனை பார்த்து அன்புமணி நெகிழ்ந்த சம்பவம் பெண்ணாகரத்தில் நடந்தது. பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் பெண்ணாகரத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மேடை அலங்கார பணியை ரமேஷ் என்பவர் செய்திருந்தார்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் அவருடன் அவரது மகன் ஜெயம் உடன் சென்று உள்ளார். அவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். மேடையில் இருந்த அன்புமணியுடன் செல்பி எடுக்க அந்த சிறுவன் ஆசைப்பட்டு உள்ளான்.

அதற்காக அடிக்கடி மேடை அருகே செல்வதும், என்னடா... இப்படி அங்கும் இங்கும் ஓடாதே என்று பெரியவர்கள் விரட்டுவதுமாக இருந்துள்ளது. இதை மேடையில் இருந்து கவனித்து கொண்டிருந்த அன்புமணி ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் ஏன் அழுகிறான் என்று தெரியாமல் அவனை மேடைக்கு அழைத்து வரும்படி கூறினார்.

மேடைக்கு வந்ததும் அன்புடன் அவனை தட்டிக்கொடுத்த அன்புமணி ஏன் அழுகிறாய்...? நல்லாத்தானே ஓடிக் கொண்டிருந்தாய்? என்று கேட்டார். அப்போது 'செல்பி' எடுக்கணும் என்று அழுதபடியே கூறியதை கேட்டதும் நெகிழ்ந்த அன்புமணி அவனை அருகில் அழைத்து அரவணைத்தபடியே கண்ணீரை துடைத்து விட்டார்.

வா... உனக்கு 'செல்பி' தானே தேவை என்றபடி செல்போனில் படம் பிடித்தார். ஆனால் அவன் மிகவும் குள்ளமாக இருந்ததால் அன்புமணியும் முட்டு போட்டு நின்றார். அப்போது அழாதேடா... சிரி என்று ஆசுவாசப்படுத்தி 'செல்பி' எடுத்துக்கொண்டார். அப்போது அந்த சிறுவனின் முகத்தில் ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

சிறுவனின் அன்பில் நெகிழ்ந்து அவனது ஆசையை நிறைவேற்றி வைத்த அன்புமணியை அனைவரும் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News