தமிழ்நாடு (Tamil Nadu)

அமித்ஷாவை இன்று அண்ணாமலை சந்திக்கிறார்: பா.ஜனதா தலைமையில் புதிய அணி அமைக்க வியூகம்

Published On 2023-10-03 06:32 GMT   |   Update On 2023-10-03 06:32 GMT
  • கூட்டணி முறிந்தது டெல்லி தலைமையை வருத்தத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.
  • ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் தொடர்பில் இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

சென்னை:

பாராளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா-அ.தி.மு.க. இடையேயான கூட்டணி முறிந்துள்ளது.

இந்த கூட்டணி முறிவுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது அ.தி.மு.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். கூட்டணியில் இருந்துகொண்டே அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், தலைவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையிலும் அவர் கருத்து தெரிவித்தது அ.தி.மு.க.வினரை கோபப்படுத்தியது.

ஆனால் அண்ணா பற்றி தான் கூறிய கருத்துக்கள் வரலாற்று உண்மை. அதற்காக மன்னிப்பு கோரப்போவதில்லை என்று அண்ணாமலை உறுதியாக கூறினார்.

இதையடுத்து அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி விவாதித்தனர். அந்த கூட்டத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முடிவெடுத்து அறிவித்தனர்.

இந்த கூட்டணி முறிவு விவகாரம் டெல்லி பா.ஜனதா தலைவர்களை அதிருப்தி அடைய வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடர வேண்டும். 2024 பாராளுமன்றத் தேர்தலையும் இதே கூட்டணியில் தான் சந்திக்க வேண்டும் என்று டெல்லி தலைமை ஆலோசனை வழங்கி வந்தது. அதனால்தான் அவ்வப்போது நெருடல்கள் ஏற்பட்டபோது டெல்லி தலைவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கூட்டணி முறிந்தது டெல்லி தலைமையையும் வருத்தத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அண்ணாமலையிடம் விளக்கம் கேட்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லி சென்ற அண்ணாமலை கட்சி தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பேசினார். அதே போல் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது ஒவ்வொரு இடங்களிலும் பேசும்போது அங்குள்ள வரலாற்று நிகழ்வுகளை பேசுவது வழக்கம். அந்த மாதிரிதான் அண்ணா பற்றிய கருத்தும் அமைந்தது. இது இயற்கையாகவே அமைந்தது என்று தன் தரப்பு விளக்கத்தை அண்ணாமலை கூறியிருக்கிறார்.

தொடர்ந்து அமித்ஷாவையும் சந்திக்க டெல்லியில் தங்க வேண்டி வந்ததால் இன்று சென்னையில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

அண்ணாமலை இன்று அமித்ஷாவை சந்திக்கிறார். அப்போது கூட்டணி தொடர்பாக அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அமித்ஷா ஆலோசனைகள் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்று ஆகிவிட்டதால் பா.ஜனதா தலைமையில் புதிய அணியை உருவாக்குவதற்கான சாத்திய கூறுகள் பற்றி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் தொடர்பில் இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார். பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியதன் பலனை எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

எனவே இவர்கள் பா.ஜனதா பக்கம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் த.மா.கா., டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவில்லை.

இந்த கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் சேர்ப்பது பற்றி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்து கொண்டு அண்ணாமலை நாளை சென்னை திரும்புகிறார்.

நாளை மறுநாள் (5-ந் தேதி) தன் மீதான வழக்கில் கோர்ட்டில் ஆஜராகிறார்.

பின்னர் 6-ந் தேதியில் இருந்து 3-ம் கட்ட யாத்திரையை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

இன்று சென்னையில் நடைபெற இருந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த கோட்ட பொறுப்பாளர்கள் 10 பேருடன் கட்சி அலுவலகத்தில் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News