சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் 234 டிரைவர்கள், கண்டக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
- மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 117 டிரைவர்கள், 117 கண்டக்டர்கள் பணிக்கு அனுப்ப விரும்பும் நிறுவனங்கள் இ-டெண்டரில் விண்ணப்பிக்கலாம்
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களிலும் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பஸ்களை இயக்குவதில் பெரும் சிக்கல் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 பணியிடங்களையும் (டிரைவர், கண்டக்டர் பணிகளை ஒரு சேர மேற்கொள்வோர்), கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் 122 டிரைவர் பணியிடங்களையும் நிரப்ப அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, கும்பகோணம் (174), சேலம் (254), கோவை (60), மதுரை (136), திருநெல்வேலி (188) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 812 டிரைவர், கண்டக்டர் பணிகளை ஒரு சேர மேற்கொள்வோருக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மேலாண் இயக்குனர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேநேரம், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகமானது ஒப்பந்தம் மூலம் 234 டிரைவர், கண்டக்டர்களை தங்களுக்கு வழங்குவதற்கு தகுதியான தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான இ-டெண்டர் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தொழிலாளர் சட்டம் 1970-ன் கீழ் உரிமம் பெற்று ஊழியர்களுக்கான மாநில காப்பீட்டு நிறுவனம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், சரக்கு மற்றும் சேவை வரி நிறுவனங்களில் பதிவு பெற்று 250-க்கும் மேற்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் உரிமம் கொண்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தி அரசு, தனியார், தன்னாட்சி நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி அதில் 3 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிறுவனங்கள் இ-டெண்டரில் பங்கு கொள்ளலாம்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 117 டிரைவர்கள், 117 கண்டக்டர்கள் பணிக்கு அனுப்ப விரும்பும் நிறுவனங்கள் இ-டெண்டரில் 6-ந் தேதி முதல் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://tntenders.gov.in/nicgep/app என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.