வேலூர் அருகே ஏ.டி.எம். எந்திரம் கோடாரியால் உடைப்பு- பணம் வராததால் தொழிலாளி ஆத்திரம்
- வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
- கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், ஊசூர்-அணைக்கட்டு மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.
இன்று காலை ஊசூர் காலனியை சேர்ந்த கந்தசாமி (வயது 53) கூலி தொழிலாளி. என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
ஏ.டி.எம். எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி பணம் எடுக்க பலமுறை முயற்சி செய்து உள்ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று கோடாரியை எடுத்து வந்தார்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கப் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கந்தசாமியை தடுத்தனர்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத கந்தசாமி ஏ.டி.எம். எந்திரம் முழுவதையும் உடைத்தார். எந்திரம் முழுவதும் துண்டு, துண்டாக நொறுங்கியது.
அங்கிருந்தவர்கள் கந்தசாமியை பிடித்து வைத்துக்கொண்டு இது குறித்து உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எந்த பணமும் திருடு போகவில்லை ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராததால் கந்தசாமி ஏடிஎம் எந்திரத்தை உடைத்துள்ளார்.
கந்தசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர்.