ரெயிலில் இருந்து போலீஸ் பெண் இன்ஸ்பெக்டரை கீழே தள்ளி விட முயற்சி: டிக்கெட் பரிசோதகர் மீது புகார்
- பெண் இன்ஸ்பெக்டரை ரெயிலில் இருந்து கீழே இறங்கு என்று கூறிய டிக்கெட் பரிசோதகர், ரெயில் பெட்டியின் கதவு வரை தள்ளி சென்றார்.
- சென்னையில் உள்ள ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அனுப்ப உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
சேலம்:
மங்களூருவில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு வெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயிலில் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை செல்ல ரெயில்வே பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஏறினார். பின்னர் அவர் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் காலியாக இருந்த ஒரு சீட்டில் அமர்ந்தார். அவர் அதற்கான அனுமதி சீட்டையும் வைத்திருந்தார்.
ஆனால் அந்த ரெயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் அவரிடம் இருந்த பயண அனுமதி சீட்டை பிடுங்கி கொண்டு என்னிடம் கேட்காமல் எப்படி ரெயிலில் ஏறலாம் என்று கூறியபடி தகாத வார்த்தைகளால் திட்டினார்.
மேலும் பெண் இன்ஸ்பெக்டரை ரெயிலில் இருந்து கீழே இறங்கு என்று கூறிய அவர் ரெயில் பெட்டியின் கதவு வரை தள்ளி சென்றார். இதனை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து டிக்கெட் பரிசோதகரை எச்சரித்தனர். இதனால் சற்று அமைதியான டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவம் ஓடும் ரெயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து சென்னையில் உள்ள ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அனுப்ப உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.